இதை எத்தனை பேர் முழுதும் படிப்பீர்கள் என்று தெரியாது, தயவுசெய்து மெனக்கெட்டு இதை முழுதும் படியுங்கள்!
Attention deficit pandemic என்றால் கவனக்குறைவு கொள்ளை நோய். உலகம் முழுவதும் பரவி வரும் புதிய கொள்ளை நோய். இது சராசரி மனிதனின் கவன நேரத்தைக் குறைக்கிறது. இந்த நோய் கொரோனா கொள்ளை நோய் தாக்கத் தொடங்கியபோது உடன் இதுவும் பரவியது. நாம் பாதிக்கப்பட்டோம் என்ற தெரியாமல் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இது ADHD என்று சொல்லப்படும் அதே நோய்தான், ஆனால் குழந்தைகளிடம் காணப்படும் ADHD வகை அல்ல.
எனக்குத் தெரிந்த நபர் ஒருவர் இதனால் பாதிக்கப்பட்டிருந்தார், அவரை நேரில் சந்தித்து விலாவரியாக இதைப்பற்றிப் பேசலாம் என்று அவரை அணுகினேன், தானே நேரில் வருவதாகக் கூறினார். நானும் அவரை சந்திக்க தயாரானேன். அவரும் நேரில் வந்தார், என்னால் நம்ப முடியவில்லை, அவர் பார்க்க சாதாரணமாகவேதான் இருந்தார், உடலளவில் எந்தவொரு மாற்றமும் தென்படவில்லை. இந்த நோய் உடலளவில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை புரிந்துகொண்டேன். எந்தவொரு நோயாக இருந்தாலும், முகத்தில் அதன் சுவடுகளை விட்டுச் செல்லும், நான் அவர் முகத்தைப் பார்த்தேன். எனக்கு தூக்கிவாரிப் போட்டது, முகம் நோயின் சுவடுகளால் நிறைந்திருந்தது, நன்றாகப் பார்த்தேன், அந்த முகம் எனக்கு நன்றாகத் தெரியும், அந்த முகம் நான் தினமும் கண்ணாடியில் பார்க்கும் என் முகம்தான். அந்த நபர் நான்தான். நான் கவனக்குறைவு கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டிருந்தேன். நான் இதனால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று தெரிந்துகொள்ள மூன்று மாதங்கள் ஆனது.
Social media has nothing to offer என்று நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். சமூக வலைத்தளங்களால் எனக்கு எந்த பயனும் இல்லாத போன்று தோன்றியது, அதனால் கடந்த இரண்டு வருடங்களாக அதைப் பயன்படுத்தும் நேரத்தைக் கணிசமாகக் குறைத்துக்கொண்டேன். அனைத்தும் சரியாகச் சென்றது, கடந்த அக்டோபர் மாதம் வரை.
அக்டோபர் மாதம் நானொரு இடத்தில் உதவி இயக்குநராக வேலைக்கும் சேர்ந்தேன். தினமும் 30 கிமீ வண்டியில் சென்று வரும் சூழல் உருவானது. இதையெல்லாம் கடினம் என்று கருதினால் வாழ்க்கை சுத்தமாக முன்னேறாது, அதனால் தினமும் சென்று வரத் தொடங்கினேன். வேலை நன்றாகச் சென்றது. நடிகர்களைத் தேர்வு செய்ய இயக்குநர் உதவி இயக்குநர்களை சமூக வலைத்தளங்களில் தேடச் சொன்னார். எனது போனில் எந்த சமூக வலைத்தளங்களும் அப்போதும் இல்லை, வேறு வழி இல்லாமல் பதிவிறக்கி வைத்துக்கொண்டேன். திடீர் திடீரென இயக்குநர் எதையேனும் அனுப்பித் தேடச் சொன்னார். அதனால் அதைப் பயன்படுத்தும் நேரம் அதிகமானது. வீட்டிற்கு வந்து பின் மெதுவாக நான் இன்ஸ்டாகிராம் பேஸ்புக் பயன்படுத்தத் தொடங்கினேன். வண்டி ஓட்டி வந்த களைப்பு, சிறிது நேரம் பயன்படுத்தினால் என்ன என்று கொஞ்சும் கொஞ்சமாக அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கினேன். அந்த படம் படப்பிடிப்புக்கு ஒருவாரம் முன்பு நின்றது. வேறு வேலை தேட வேண்டிய அவசியம், சமூக வலைத்தளங்களில் இருக்க வேண்டும் என்று கட்டாயம் ஏற்பட்டது. இயக்குநர்கள் யாரேனும் உதவி இயக்குநர்கள் தேவை என்று பதிவிட்டால், அதைப் பார்த்து உடனே அவர்களை அணுக வேண்டும், இல்லையென்றால் வேறு ஒருவர் அந்த வேலையைத் தட்டிப் பறித்துக் கொள்வார்கள், ஏனென்றால் உதவி இயக்குநராக பணியாற்ற அவ்வளவு பேர் தவம் இருக்கிறார்கள். நானும் இருக்கத் தொடங்கினேன், சில வாய்ப்புகள் வந்தது, ஆனால் எல்லாம் நேரமும் வாய்ப்புகள் பற்றிய அறிவிப்பு வராது. விளைவு சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தும் நேரம் அதிகமானது.
ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் தேடிச் செல்லாமல் இன்ஸ்டாகிராம், யூடியூப் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் ஏற்பட்டது. நாட்கள் ஓடியது, நான் Freelance Video editing வேலை செய்வதில் மூழ்கிப் போனாலும், இதைப் பயன்படுத்தவதை நிறுத்தவில்லை.
சில நாட்களுக்கு முன்பு, தன் பாடலை எடிட்டிங் செய்வதற்கு இசையமைப்பாளர் ஒருவர் என்னிடம் வந்தார். பாடல் பொதுவாகவும், பழைய பாடல் பாணியில் தான் இருப்பதாகவும், இப்போது இருக்கும் இளைஞர்களுக்கு இது சென்று சேருமா என்று கேள்வி கேட்டார். நான் அதற்கு இவ்வாறு பதிலளித்தேன்:
கொஞ்சம் கஸ்டம்தான், உங்க பாட்டு அஞ்சு நிமிஷம் இருக்கு, இப்போ இருக்குற யாருக்கும் பொறுமையில்ல, எல்லாரும் ரீல்ஸ், ஷார்ட்ஸ்னு பாக்குறாங்க, எல்லா ரீல்ஸும் ஒரு நிமிஷம் கிடையாது, சில ரீல்ஸ் 30 செகன்ட், சில ரீல்ஸ் 15 செகன்ட், சிலது 10 செகன்ட்னு இருக்கு, குறைஞ்சது அரை மணி நேரத்துக்கு 90 ரீல்ஸ் பாக்குறாங்க, இது வெறும் அரை மணி நேரம் தான், ஒரு நாள் முழுக்க சராசரியா ஒன்றரை மணி நேரம் ரீல்ஸ் பார்த்தா, 250 - 270 ரீல்ஸ், எப்படி அவங்ககிட்ட பொறுமைய நாம எதிர்ப்பார்க்க முடியும்? அவங்கள தப்பு சொல்ல முடியாது, வொர்க் டென்ஷன்லிருந்து தப்பிக்க பாக்குறாங்க. ஆனா அத மட்டும் பார்த்த அவங்களோட Attention span கம்மி ஆகுது, ஒவ்வொரு நாளும் அவங்களோட கவனம் வீக் ஆகுது, அதோட பாதிப்பே அவங்களால கண்டுபிடிக்க முடியாது. வொர்க் டென்ஷன்லிருந்து தப்பிக்க வேற வழியெல்லாம் இருக்கு ஆனா அத யாரும் செய்யுறது இல்ல. இப்போலாம் என்கிட்ட ரீல்ஸ் எடிட்டிங் வரவங்கதான் அதிகம், என்ன செய்ய முடியும்? யார போய் கேள்வி கேட்க முடியும்? அதனால வீடியோ எடிட்டிங் வேலை செய்யுற எனக்கு கவனமும் பொறுமையும் குறையுது. எடிட்டிங்க்கு தேவையே பொறுமதான், அதுக்கே இந்த நிலைமைனா? முன்னாடிலாம் ரீல்ஸ் பாத்தாங்க, இப்போ ரீல்ஸ கேக்குறாங்க. பாக்குறதுகூட இல்ல. சுத்தமா கவனகுவிப்பே இல்ல. இதனால சில குழந்தைகளுக்கு வர ADHD(Attention-deficit/hyperactivity disorder) வளர்ந்த நமக்கு செயற்கையா வருது, வயசான வர Alzheimer(மறதி நோய்) இப்பவே வருது. சின்ன குழந்தைங்க ரீல்ஸ் பாத்தாதான் சாப்பாடு சாப்பிடுறாங்க. அவங்க நிலமலாம் நம்மள விட இன்னும் மோசம்!
அப்போதுதான் அந்த வார்த்தையை என்னை அறியாமல் கூறினேன்.
'We're in attention deficit pandemic'
ஆம், நாம் அனைவரும் கவனக்குறைவு கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோம், உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள், உண்மையில் நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு நேரம் ரீல்ஸ் ஷார்ட்ஸ் பார்க்கிறீர்கள்? எல்லாச் சமூக வலைத்தளங்களிலும் 'Your activity' அல்லது 'Time spent' என்று ஒரு செட்டிங் இருக்கும், அதில் நீங்கள் ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம் சமூக வலைத்தளங்களில் செலவிடுகிறீர்கள் என்று கணக்கு இருக்கும். அதைப் பார்த்து நீங்களே உங்களைக் கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள்! கடைசியாக எப்போது நீங்கள் ஒரு புத்தகம் படித்தீர்கள் என்று நான் கேட்கப் போவதில்லை, ஏனென்றால் வாசிக்கும் பழக்கமில்லாத ஒருவரைப் பார்த்து அந்த கேள்வியைக் கேட்பது தவறு, இவ்வளவு வேலை களைப்பில் கண்டிப்பாக வாசிப்பது கடினம், அதை நானும் உணர்ந்திருக்கிறேன், ஆனால் உங்கள் வேலையில் முன்னேற உங்கள் துறை சார்ந்து பார்க்கலாம் இல்லையா? அப்படி எப்போது கடைசியாக ஒரு இருபது நிமிடம் வீடியோவை பார்த்தீர்கள்? அதற்கான வாய்ப்புக்கள் இணையத்தில் கொட்டி கிடக்கிறது அல்லவா? எதுவும் இல்லையென்றால் ஒன்றும் செய்யாமல் இருங்கள். அது அனைவராலும் முடியும், அதற்கு எந்தச் செலவும் ஆகாது.
ஒரு நாள், ஒரே ஒரு நாள் ரீல்ஸ் ஷார்ட்ஸ் பார்க்காமலிருந்து இருங்கள். உடனே பலன் தெரியாது, கூடுதலாக இரண்டு மூன்று நாட்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தாமல் இருங்கள். உங்கள் தொழிலை முன்னேற்றும் வீடியோக்கள் பாருங்கள். உங்கள் தொழில், உங்கள் வாழ்க்கை இரண்டு தெளிவு பெறும்
நானும் உங்களைப் போல் மாட்டிக்கொண்டு, இப்போது அதிலிருந்து மீண்டு வருகிறேன். நான் வேலை செய்யும் படம் வெளியாவதால் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துகிறேன். அது முடிந்த பிற்பாடு நான் அதிலிருந்து முற்றிலும் என்னைத் துண்டித்துக் கொள்வேன், மீண்டும் எனக்கு அடி சறுக்கும், வேறொரு இடத்தில் வேலைக்குச் சேருவேன், அப்போதும் என்னை சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தக் கூறுவார்கள், அப்போது மட்டும் பயன்படுத்தி விட்டு, அவற்றை என் போனிலிருந்து நீக்கிவிடுவேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன் ஏனென்றால்,
Scrolling is the new smoking. - The minimalists
Comments