கடந்த ஏப்ரல் முதல் நாளன்று வாட்ஸ்ஆப்பில் 'I have lost 22 Kgs in last four months and happy April fool's day' என்று பகிர்ந்தேன். அனைவரும் நான் விளையாட்டாகச் சொல்கிறேன் என்பதை புரிந்துகொண்டு ஹாஹா ரியாக்ட் தட்டி விட்டார்கள்.
குறிப்பாக ஒருவன் மட்டும் போடா **** என்று அனுப்பியிருந்தான். நீயாவது செய்வதாவது என்ற தொனியில் தான் அந்த குறிப்பிட்ட பதிலிருந்தது. மற்றவர்களுடைய பதிலும் அவ்வாறே இருந்தாலும் இந்த பதில் தான் என்னைச் சிந்திக்க வைத்தது. ஏன் என்னால் செய்ய முடியாதா என்றால் கடினம் தான் ஆனால் முயன்று பார்க்கலாம். ஆனால் நான் புரிந்துகொண்டது மனிதனாவான் என்றும் மாற்றத்தை விரும்புவது இல்லை. ஆம் மாற்றம் அவனைப் பயமுறுத்துகிறது.
குறிப்பிட்ட உன்னை எவ்வாறு என் நினைவில் வைத்துள்ளேனோ அவ்வாறே நீ இருக்க வேண்டும் என்று மனிதன் விரும்புகிறான். ஏன் இவன் மாறியிருக்கக் கூடாது என்று சிந்திப்பது இல்லை, மாறாக இவனாவது மாறுவதாவது என்று உறுதியாக நினைக்கிறான். இந்த சிந்தனை ஓட்டம் அவன் இயற்கைக்கு எதிராக அவன் நடத்தும் போர். அந்த போரின் ஒருபகுதி தான் மரணம்.
அந்த மரணத்தைத் தள்ளிப் போடுவதிலேயே, அதை வெல்வதிலேயேதான் அவன் பல்லாயிரக்கணக்கான வருடங்களைக் கழித்து வருகிறான். அறுபதுகளிலிருந்த இறப்பின் விகிதத்தை விட இப்போது அதிகம் குறைந்துள்ளது, அதற்குக் காரணம் நவீன மருத்துவம்தான். இதை அடைய அவன் இயற்கையோடு போட்டிப் போட்டுக்கொண்டே இருக்கிறான். இப்போது கூட இந்த கொரோனா என்ற கொள்ளை நோயோடு யுத்தம் செய்கிறான். இதையும் வென்று எப்படியாவது எக்காலத்திற்கும் சாகாவரம் பெற்று உயிர் வாழவே அவன் விரும்புகிறான். அவனுடைய வாழ்க்கையில் வேறு குறிக்கோள் எதுவும் கிடையாது. இயற்கையின் மாற்றம் என்ற ஆயுதத்தை அதற்கு எதிராகவே அவன் பயன்படுத்துகிறான்.
இதே காரணத்தால் தான் பழைய நாட்களை அவன் மிகவும் அதிகமாக விரும்புகிறான், ஏனென்றால் நாட்கள் ஓடுகிறது, அவனால் பழைய நாட்களை நினைவுபடுத்தி மட்டுமே பார்க்க முடிகிறது. இந்துவொரு வசதியை மட்டுமே இயற்கை இவனுக்கு வழங்கியுள்ளது. ஆனால் அந்த நினைவுகளும் மறக்கும் நிலை ஏற்படுவதால், அவன் என்ன செய்வது என்று புரியாமல் சிந்தித்தபோது அவன் கண்டுபிடித்தவைதான் புத்தகங்கள், ஓவியங்கள், சிற்பங்கள் இறுதியாக்கப் புகைப்படக் கருவி.
அதில் பிடிக்கும் புகைப்படம் மூலம் ஓரளவு பழைய நினைவுகளைச் சேமித்து வைத்துக்கொள்ளத் தொடங்கினான். தொடர்ந்து முயன்று வீடியோ கேமராக்கள் கண்டுபிடித்தான், இப்போது இரண்டையும் இணைத்து அனைவரின் கையிலும் ஸ்மார்ட்போனாக வந்து நிற்கிறது. அதனால்தான் மக்கள் எங்குச் சென்றாலும், எது நடந்தாலும் உடனே போனை எடுத்து புகைப்படமும் வீடியோவும் எடுக்கிறார்கள். இப்படிப் போட்டோ எடுப்பது நோய் என்று நினைக்கிறோம் ஆனால் இது பல்லாயிரக்கணக்கான வருடப் பரிணாமத்தின் ஏக்கம் என்று இப்போது புரிகிறது.
ஏன் ஒரு வீட்டிலிருந்த வேறொரு வீட்டிற்குக் குடிபெயர்வதை, ஒரு பள்ளியிலிருந்து, கல்லூரியிலிருந்து, அலுவலகத்திலிருந்து, பணியிலிருந்து மாறுதல் அடைய பயப்படுவதற்குக் காரணமும் இதுதான், காதலில் விரிசல் ஏற்பட்டால் உடனே அச்சம் கொள்வதற்கும் காரணமும் இதுதான். மனிதனுக்கு அனைத்தும் என்றும் நிலையாகவே இருக்க வேண்டும்.
ஒருவன் மாற்றமடைய முயல்கிறான் என்றால் அவனைத் தடுக்கவே அனைவரும் பார்ப்பார்கள். அவனிடமே நீ சரியாகச் செய்து விடுவாயா, ஒன்றும் பிரச்சினை இல்லையே என்று கேட்பார்கள். அதன் உண்மையான அர்த்தம் நீ செய்யக்கூடாது, செய்யவும் விடமாட்டேன், நீ தோல்வியைத் தழுவியே தீர வேண்டும். மாற்றமடைய விரும்யிவனும் பயந்து பின்வாங்கிவிடுவான். இதையும் உடைத்து ஒருவன் வந்தால் அவனிடமும் முன்பு எப்படி இருந்தாய் என்றே மீண்டும் பேசுவார்கள். இந்த நிலை என்றும் மாறாது, ஏனென்றால் இது மனிதன் இயற்கைக்கு எதிராக நிகழ்த்தும் போர்.
மாற்றம் ஒன்றே மாறாதது என்று ஆறாம் நூற்றாண்டிலேயே தத்துவஞானி ஹிராக்ளிட்டஸ் (Heraclitus) முழங்கியது தான் உண்மை. மாற்றம்தான் மனித இனம் சந்தித்த சந்திக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல்.
Comments