top of page
Writer's picturePari

Social Media has nothing to offer!


2010-ஆம் ஆண்டு 13 வயதே நிரம்பாத அந்த ஆண்டில் இமெயில் ஐடி உருவாக்கப் போலியான வயதை நிரப்பி கணக்கை உருவாக்கினேன். அடுத்த ஆண்டே பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என இரண்டும் எனக்குப் பிரபலமானதாகத் தோன்றியது. ஆனால் அதற்கு முன்பே பேஸ்புக் பிரபலமானதாக இருந்தது. அப்போதுதான் இன்ஸ்டாகிராமும் வெளியாகிப் பிரபலமானது. உடனே நானும் அதில் எனது கணக்கைத் தொடங்கினேன். என்ன செய்வது என்று தெரியவில்லை. அதில் செய்யக் கூடியது எல்லாம் வெறும் மெஸேஜ் செய்வதும், யாரென்றே தெரியாதவர்களுக்கு பேஸ்புக் Request தருவது மட்டுமே. நான் கணக்கைத் தொடங்கியபோது, எனது பள்ளி நண்பன் ஒருவன் மட்டுமே இருந்தான். அவன் லண்டனிலிருந்து இங்குப் படிக்க வந்தவன், அதனால் அவனுக்கு அதைப் பயன்படுத்தும் வாய்ப்பு முன்பே கிட்டியிருந்தது. காலையிலிருந்து மாலை வரை அவனைப் பள்ளியில் பார்த்திருப்பேன். ஆனால் மாலை வந்து அவனுக்கு பேஸ்புக்கில் மெஸேஜ் அனுப்புவேன். அவனும் என்றாவது பள்ளிக்கு வரவில்லை என்றால், அன்று என்ன நடந்தது, நாளை எதாவது செய்து வர வேண்டுமா என்று கேட்பான். நானும் அதற்கே பயன்படுத்தினேன். அதைத் தாண்டி யாரென்றே தெரியாத தெலுங்கு பையன் ஒருவன் பேஸ்புக் நண்பனாக இருந்தான், அவனோடு சினிமாவை பற்றிப் பேசுவேன். அவனால் தான் எனக்குப் பவன் கல்யாண் தான் பவர் ஸ்டார் எனத் தெரிந்தது, நான் நம் ஊர் சீனிவாசன் தான் பவர் ஸ்டார் என நினைத்திருந்தேன். மேலும் இரண்டு மூன்று நண்பர்கள் பேஸ்புக் வந்தனர். அவர்கள் எல்லாம் போட்டோ பதிவேற்றினால் அதற்கு லைக் இடச் சொல்லி மெஸேஜ் செய்வார்கள். இல்லையெனில் சண்டை வரும். அவ்வளவுதான் அதைத் தாண்டி அதில் செய்ய ஒன்றுமே இல்லை. மறுபக்கத்தில் இன்ஸ்டாகிராமிலும் அதேதான். அதில் மெஸேஜ் செய்யக்கூட அப்போது வசதி கிடையாது. அதுவொரு Photobucket. அதில் அனைவரும் Photos போடுவார்கள், அதற்கு லைக் போடலாம் அவ்வளவுதான். இடையில் வாட்ஸ்அப், ட்விட்டரும் வளர்ச்சி அடைந்தது. ட்விட்டர் பிரபலங்களுடன் நேரடியாகப் பேசும் இடமாக இருந்தது. வாட்ஸ்அப்பில் Status போடும் வசதியெல்லாம் கிடையாது. இன்றைய About me தான் அன்றைய ஸ்டேட்ஸ் போடும் இடம். அதில் Video call, audio call, voice message என எதுவும் கிடையாது. இன்ஸ்டாகிராமையும், வாட்ஸ்அப்பையும் பேஸ்புக் நிறுவனம் வாங்கியது. பின் அப்டேட்ஸ்களை அள்ளி அள்ளி கொடுத்தது. அனைத்தும் அடுத்த ஐந்து வருடங்களில் அசுர வளர்ச்சி அடைந்தது. இவை அனைத்தும் இன்று 2022-ஆம் ஆண்டு நமக்கு என்ன தருகிறது? ஒன்றுமில்லை. ஆனால் பயன்படுத்துகிறோம், பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை அதில் என்ன இருக்கிறது எடுத்து எடுத்துப் பார்க்கிறோம். ஆனால் ஒரு வாரம், ஒரே ஒரு வாரம் அதைப் பயன்படுத்தாமல் பின் உள்ளே சென்றால், அங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. யார் யாரைத் திட்டுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளவே நேரம் பிடிக்கிறது. அதன் பாஷையில் சொன்னால் யார் யார் மேல் வன்மத்தை அள்ளிக் கொட்டுகிறார்கள் என்பதே தெரியவில்லை. அதற்குத்தான் பிரதானமாக இன்று அனைத்து சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்துகிறார்கள். பின் நாம் நம் வாழ்க்கையை நிரூபிக்கவே பயன்படுத்துகிறோம். போட்டோ, ஸ்டேட்ஸ், ரீல்ஸ் எதற்கு, நான் இங்கே சென்றேன், நான் இங்குச் சாப்பிடப் போகிறேன் என்று போட்டு யாருக்கு அதைக் காட்ட விரும்புகிறோம்? என்னுடைய மகிழ்ச்சிக்காகப் போடுகிறேன் என்றால், அப்போது நாம் செல்லும் இடத்திலும், நாம் உண்ணும் உணவிலும் நமது மகிழ்ச்சி இல்லையோ என்று கேள்வி எழுகிறது. இதில் தான் அந்த மகிழ்ச்சி இருக்கிறது என்றால், இதை அடைய நாம் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் மதிப்பு வாய்ந்ததுதானா? எனக்கு அப்படித் தோன்றவில்லை, கடைசி பத்து வருடங்களில் தான் இந்த மகிழ்ச்சிக்கான இடம் மாறியுள்ளது, அதுவுமில்லாமல், இது செயற்கையானது. இன்று இவையெல்லாம் இல்லையென்றால், நாம் என்ன செய்துகொண்டு இருப்போம்? எனக்கும் தெரியவில்லை. ஆனால் ஒருவாரம் இவற்றைப் பயன்படுத்தாமல் இருந்தால் உண்மையாகச் சலிப்பு தட்டுகிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஏன் சலிப்பு ஏற்படுகிறது என்றால், இதை நான் மாத்திரம் பயன்படுத்தாமல் இருக்கிறேன். நான் பேச நினைப்பவர்கள், அதைப் பயன்படுத்துகிறார்கள். உனக்கு பிடிக்கலனா நீ போட என்று சொல்வீர்கள். உங்களையும் பயன்படுத்தக் கூடாது என்று நான் சொல்ல வரவில்லை. நீங்கள் எதற்காக சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைக் கொஞ்ச நேரம் சிந்தித்துப் பாருங்கள் என்பதைத் தான் நான் சொல்ல வருகிறேன். இவ்வளவு சொல்லும் நான் இதே சமூக வலைத்தளம் மூலம் தான் உங்கள் அனைவரிடமும் உரையாட முடியும் என்பது முரண் தான். உண்மையில் அதற்கு இது நன்றாகவே பயன்படுகிறது. ஏனென்றால் நான் ஒவ்வொருவருக்கும் நேரில் சென்று சொல்ல முடியாது. இதன் காரணமாக உண்மையான உரையாடல்களை நாம் இழந்து கொண்டு இருக்கிறோம். சிலர் சொல்லலாம் சமூக வலைத்தளங்களை நாம் எப்படி இதைப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் உள்ளது என்று, சரிதான். சிலர் மட்டுமே தங்கள் தொழிலை மக்களிடம் சென்று சேர்க்கப் பயன்படுத்துகிறார்கள், மக்களை அடைய இன்று இதுதான் வேகமான வழி என்பதை மறுக்க முடியாது. ஆனால் மீதம் உள்ளவர்கள் உண்மையில் சரியாகப் பயன்படுத்துகிறார்களா? அதை நாம் காட்ட வேண்டிய அவசியமில்லை, சிந்தித்துப் பார்த்து நாம் உணர்ந்தாலே போதும். நான் சிந்தித்துப் பார்த்த வரைக்கும், சமூக வலைத்தளங்கள் எனக்கு அளிக்க ஒன்றும் இல்லாமல் போய்விட்டது. நாள் முழுவதும் பயன்படுத்துவது மூலம் எந்த மகிழ்ச்சியும் கிடைப்பதாகத் தெரியவில்லை.


Our world is so glutted with useless information, images, useless images, sounds, all this sort of thing. It's a cacophony, it's like a madness I think that's been happening in the past twenty-five years. And I think anything that can help a person sit in a room alone and not worry about it is good. Martin Scorsese


54 views2 comments

Recent Posts

See All

2 Comments


vithush2012
Jul 30, 2022

அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிப்போய் உள்ளதென்பது தான் இங்க கசப்பான விடையம்

Like
paritamilselvanoff
paritamilselvanoff
Jul 30, 2022
Replying to

உண்மை!

Like
This image has three writers Camus, Dostoevsky & Kafka with a quote
bottom of page