To read this article in English, click here
"அவ்வளோதான் தோத்துறும், 41 ரன்லாம் ரெண்டு ஓவர்ல அடிக்க முடியாது, சான்ஸ்ஸே இல்ல" என்று என் அண்ணன் அருகில் உட்கார்ந்து கொண்டு வெறுப்பேற்றிக்கொண்டு இருந்தான்.
என் அண்ணன் கூறியதை நான் காதில் போட்டுக்கொள்ளாமல் பார்க்கலாம் பார்க்கலாம் என்று கூறிக்கொண்டே அமைதியாக இருந்தேன்.
சென்னை சூப்பர் கிங்ஸூம், ராஜஸ்தான் ராயல்ஸூம் இடையேயான போட்டி அது. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 175 ரன்கள் குவித்தது. ஐந்து விக்கெட்களை இழந்த நிலையில் சென்னை அணி பேட்ஸ்மேன்களான தோனியும், ஜடேஜாவும் களத்திலிருந்தனர்.
கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி ஓவரில் சந்தீப் சர்மா அருமையாக பவுலிங் வீசி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற வைத்தார்.
என் அண்ணன் என்னைக் கிண்டல் செய்தான். நான் அப்போது அவனிடம் இதுவெல்லாம் எனக்குப் பழகி விட்டதாகக் கூறினேன். 2019-ஆம் ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றுப் போனது, அது போன்று பல தோல்விகளை நான் பார்த்துள்ளேன் என்று கூறி சமாளித்தேன். ஆனால் அன்று சந்தீப் சர்மா அருமையாகப் பந்து வீசினார். தோனியும் முயற்சி செய்தார், ஆனால் வெற்றி பெற முடியவில்லை. அன்று எனக்கு உண்மையில் விரக்தி ஏறப்படவில்லை, காரணம் நான் இதற்கு முன்பு நடந்த போட்டியை நேரில் சென்று ஸ்டேடியத்தில் பார்த்ததின் நூறு சதவீதம் விளைவு.
நான் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் விளையாடிய போட்டிக்குச் சென்றேன். நான் கிரிக்கெட் போட்டியை ஸ்டேடியத்தில் காண்பது அதுவே முதல் முறையாகும். முதலில் ஆடிய சென்னை அணி 217 ரன்கள் மேல் குவித்தது. குறிப்பாக டுபே விளையாடிய போது மிகவும் தடுமாறினார், ஸ்டேடியத்தில் இருந்த அனைவரும் அவரை திட்டி தீர்த்தனர். அவுட் ஆகிச் செல்லுமாறு கத்தினர். சிலர் அவர் பெயரைச் சொல்லி கைதட்டி ஆரவாரம் செய்தனர், இது செய்துக்கொண்டு இருக்கும்போதே டுபே இரண்டு சிக்ஸ்களும், ஒரு பவுண்டரியும் விளாசினார். ஸ்டேடியத்தில் இருந்த அனைவரும் தொடர்ந்து டுபேவை ஊக்குவித்தோம்.
இரண்டாவது இன்னிங்ஸ் இறுதியில், லக்னோவிற்கு இரண்டு ஓவர்களில் 37 ரன்கள் தேவைப்பட்டது, பதோனியும், கவுதமும் களத்திலிருந்தனர். நன்றாகத் தடுமாறினார்கள். கடைசி ஓவரில் 28 ரன்கள் தேவைப்பட்டபோது துஷர் தேஷ்பாண்டே பந்து வீச வந்தார். வந்தவர் வந்தவனாக மாறினார். திடீரென ஒரு நோ பால், ஒரு வைட் எனத் தொடர்ந்து வீசியதும் ரசிகர்கள் அனைவரும் துஷரை திட்டி தீர்த்தனர், அதில் நானும் ஒருவன்தான், இல்லையென்று மறுக்க மாட்டேன். தோனியும் உண்மையில் வெறுப்போடு காணப்பட்டார். ஆனால் எப்படியோ நன்றாகப் பந்து வீசி 12 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வெற்றி பெற வைத்தார். அனைவரும் மகிழ்ச்சியுடன் வீட்டிற்குச் சென்றோம்.
அன்று நான் நன்றாக ஒன்றைப் புரிந்துகொண்டேன், இத்துணை பேருக்கு மத்தியில் விளையாடுவது கண்டிப்பாகச் சுலபமானது அல்ல. அது ஸ்டேடியத்தோடு முடியாமல், நம்மை டிவியிலும் கோடிக்கணக்கானோர் காண்கிறார்கள் என்ற பிரக்ஞையே விளையாட்டு வீரரை நிலைகுலைந்து போக வைக்கும். நான் அவ்வாறு தான் உறுதியாக நம்புகிறேன்.
என்னுடன் மேட்ச் பார்க்க வந்த நண்பன், ஸ்டேடியத்தின் சுற்றளவைப் பார்த்தபோது,"என்னடா, நாமளே சிக்ஸ் அடிக்கலாம் போலியே" என்றான். அடிக்கலாம்தான் ஆனால் நாம் அந்த இடத்திலிருந்து, அந்த பிரக்ஞையோடு விளையாடும்போது கண்டிப்பா தடுமாறுவோம். விளையாட்டு வீரர்கள் அவர்களுடைய நூறு சதவீதத்தைத் தருகிறார்கள், சில முறை அது பயனளிக்கிறது, சில முறை அது பயன் அளிப்பதில்லை.
சமீபத்தில் அமெரிக்க இணையத்தொடரான 'Ted Lasso' பார்த்தேன். கதையானது அமெரிக்கா ஃபுட்பால் பயிற்சியாளரான டெட் லாஸோ பிரிட்டிஷ் ஃபுட்பால் பற்றி ஒன்றுமே தெரியாமல் ஏஃப்சி ரிச்மண்ட் என்ற அணிக்குப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்று வழி நடத்துவார். அவருடைய அனுபவங்கள், வீரர்களின் அனுபவங்கள் என்று கதை நீளும்.
ஒரு எபிசோடில், தொடர் தோல்வியால் வெறுப்பான ரசிகர்கள் மூவர் டெட் லாஸோவிடம் கோவம் கொண்டு,
"நீ என்ன செய்துகொண்டு இருக்கிறாய்? ஏன் உன்னால் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை" என்று சரமாரியாகக் கேள்வி கேட்பார்கள்.
டெட் பொறுமையாக," கோபப்பட வேண்டாம், நீங்கள் ஏன் வீரர்கள் பயிற்சியின் போது வந்து பார்க்க கூடாது? நாங்கள் உங்களிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை" என்று கூறுவார். ரசிகர்களும் பயிற்சிக்கு செல்வார், அங்கு நடக்கும் பயிற்சியை பார்ப்பார்கள்.
பின் ரிச்மண்ட் அணி ஆர்சனல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேவலமான தோல்வியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும். இதை ரசிகர்கள் மூவரும் பார் ஒன்றில் டிவியில் மற்ற ரசிகர்களோடு பார்த்துக்கொண்டு இருப்பார்கள். விரக்தியில் பார் உரிமையாளரான மே கோபத்தில் கத்துவார். அப்போது இந்த மூவரும், அவரை பொறுமையாக பார்க்குமாறு சொல்லுவார்கள். அந்த சூழ்நிலையில் என்ன தேவை என்று சிந்திக்குமாறு சொல்வார்கள். மே மூவரின் மாற்றத்தை கண்டு ஆச்சரியத்தில் மூழ்கி போவார். ஏனென்றால் அவர்கள் மூவரும் எப்போதும் அனைவரை விடவும் அதிகமாக கோபம் கொள்பவர்கள்.
ரிச்மண்ட் ரசிகர்கள் மூவர் எதிர்கொண்ட அதே மாற்றத்தைதான் நானும் எதிர்கொண்டேன்.
இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த சென்னை - பஞ்சாப் அணிக்கு இடையேயான போட்டியின் போது கடைசி ஓவரில் பஞ்சாப் 9 ரன்களை மட்டுமே அடித்து வெற்றி பெற வேண்டிய நிலையில் 19 வயதான பத்திரனா ஐந்து பந்துகளில் ஆறு ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார், ஆனால் கடைசி பந்தில் சரியான ஷாட்டை அடித்து பஞ்சாப் அணி வெற்றி பெற்றது, நான் தடாலென்று கைதான் தட்டினேன், பரவாயில்லை இது நடக்கத்தான் செய்யும் என்று புரிந்துகொண்டேன்.
விளையாட்டு என்றால் இப்படிதான் இருக்கும் என்று நீங்கள் கூறலாம், அது எனக்கும் தெரியும், ஆனால் ஸ்டேடியத்தில் பார்த்த அனுபவம், அந்த கூற்றை நன்றாகப் புரிய வைத்தது.
இதுவே 2019-ஆம் ஆண்டு இறுதிப்போடியின் போது மனமுடைந்து போயிருந்த என்னிடம் முடிவை பற்றி கேட்டிருந்தால் நிச்சயம் கண்டபடி கத்தியிருப்பேன்.
வாழ்க்கையில் நாம், நம்மை பற்றி இவர் என்ன நினைப்பார், அவர் என்ன நினைப்பார் என்று ஒவ்வொரு நொடியும் நினைத்து நிலைகுலைந்து போகும்போது, அவ்வளவு பேருக்கு மத்தியில் அவர்கள் விளையாடுவது பெரிய விடயம் தான். இது அனைத்து விளையாட்டுக்கும், அரசியலுக்கும், சூழ்நிலைக்கும் பொருந்தும்.
Comments