To read this article in english - (click here)
யாருடனும் தத்துவ ரீதியாக ஒரு உரையாடல் பகிர்ந்துகொள்ள முயலும் போது எப்போதும் அவர்களிடம் நான் கேட்கும் முக்கியமான ஒரு கேள்வி: உங்கள் பெயர் என்ன? பதில் குழப்பத்துடன் வரும், அவர்கள் பெயர் 'ஃ' என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் ஃ என்று உங்களுக்கு எவ்வாறு தெரியும் என்று கேட்பேன். அவர்கள் முகத்தைக் குழப்பம் பூத்துக்குலுங்கும். நான் மீண்டும் அந்த கேள்வியைக் கேட்டு பின் அதை விரிவாக எடுத்துரைத்த பின் அவர்கள் புரிந்து கொள்வார்கள். சரியாகக் கேள்வியைப் புரிந்து கொண்டவர்கள் தங்கள் அப்பா அம்மா வைத்த பெயர் என்பார்கள். அவர்களுக்கு நீங்கள் ஃ என்பது எப்படி எவ்வாறு தெரியும் என்று கேட்டால் பதில் இருக்காது.
ஃ சுருள் முடிக்காரராக பிறந்தவர் என்பதால் அவருக்கு ஃ என்று அவருடைய பெற்றோர் ஃ என்று பெயர் வைக்கவில்லை. எங்கோ கேட்டதன் விளைவு, எதையோ படித்ததின் விளைவு, யாரோ ஒரு ஜோசியர் ஃ என்று பெயர் வைத்தால் பெரிய ஆளாக வருவார் என்று அந்த பெயரை வைத்திருக்கலாம், இல்லையென்றால் ஃவுடைய தாத்தா பாட்டியின் பெயராக இருந்திருக்கலாம், ஃவுடைய பெற்றோர் நாவலொன்று படித்து அதில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயராக இருந்திருக்கலாம், அதைச் சூட்டி மகிழ்ந்துகொள்ள நினைத்திருக்கலாம். ஆனால் ஃ என்பவருக்கு ஃ என்ற பெயர் இயற்கையாக வந்தது அல்ல. ஃ என்று அவரை சிறு வயது முதல் அவரை அழைத்து வந்ததால்தான் அவர் ஃ என்ற நபர் ஆகிறார். அவரும் அந்த ஒலி சத்தத்திற்குப் பழகியதால் அவரும் அந்த ஒலி மூலம் அழைக்கும் நபருக்குப் பதிலளிப்பார். அவரை ஐ என்று அழைத்து வந்தால், அவர் ஐ என்ற நபராக வளர்ந்திருப்பார்.
ஒரு மரத்திற்கு தானொரு மரமென்றோ, ஒரு பூனைக்குத் தானொரு பூனை என்றோ தெரியாது, ஏதோவொன்று அவற்றை இயக்குகிறது, அந்த இயக்கும் சக்திக்கு மனிதன் என்பவன் பலவாறு பெயர்கள் வைத்துள்ளான். அதைக் கடவுள் என்றோ இயற்கை என்றோ எதுவானாலும் நாம் அழைத்துக் கொள்ளலாம். ஆனால் அது நிலையானதும் அல்ல, நிரந்தரமானதும் அல்ல. ‘அ’ என்ற வார்த்தை அ தான் என்று யார் கூறியது?
இந்த மேற்கூறிய வாதம் அனைத்துக்கும் பொருந்தும். நாடுகள், சாதிகள், மதங்கள், தத்துவங்கள் அனைத்துக்கும் பொருந்தும்.
உதாரணமாகச் சோவியத் ஒன்றியம், சோவியத் ஒன்றியம் என்ற நாட்டின் இருத்தலைச் சிலர் நம்பியதால் மட்டுமே அவை இயங்கியது. மக்கள் அதன் மீது நம்பிக்கை இழக்க அது வீழ்ந்து போனது. நாம் நம்பும் அனைத்து நாடுகளுக்கும் அதே நிலைதான். எப்போது வேண்டுமானாலும் நாடுகள் தகர்ந்துபோகலாம்.
இன்று வரை விலையுயர்ந்த பொருளாக இருப்பது தங்கம், நாளையே சட்டென்று உலகத் தலைவர்கள் ஒன்று கூடி நாளை முதல் மாட்டுச் சாணம் தான் விலையுயர்ந்தது என்று கூறினால் என்னாகும், நாம் அனைவரும் மாட்டின் பின்னால் அலைவோம். ஏற்கனவே அலைந்து வருகிறார்கள், கூடிய விரைவில் அதை அதிகாரப்பூர்வமாக நமது பிரதமர் அறிவித்தாலும் வியப்பில்லை.
இப்படியொரு கட்டமைப்பில் வாழ்ந்து வரும் நாம்தான் நல்லது இவை கெட்டது இவை பிரித்து வைத்து வாழ்ந்து வருகிறோம். உண்மையில் அப்படி ஒன்றே கிடையாது. நாம் நல்லது கெட்டது என்று நினைக்கும் அனைத்தும் நாம் சந்திக்கும் மரணம் என்ற விடயத்தால் அமைக்கப்பட்டதுதான். மரணத்தை நாம் விரைவில் இன்னும் சில நூறு ஆண்டுகளில் வென்று எடுத்ததும் பல நல்லது கெட்டது மறைந்து போகும். அவற்றால் ஏற்படப் போகும் குழப்பத்தை அன்றைய மனிதர்கள் எவ்வாறு கையாள்வார்கள் என்று என்னால் சிந்திக்க முடியவில்லை.
ஒரு உயிரைக் கொல்வதால் ஒருவன் கெட்டவன் என்கிறோம், நம்மை யாரும் கொல்ல முடியாது என்ற சூழ்நிலை உருவாகும் போது அப்போது அந்த நல்லது கெட்டது மறைந்து போகும். புதிதாக ஒரு நல்லது உருவாகும். ஒருவரை அடிப்பதே இன்று கெட்டதாகக் கருதுகின்றனர், சில வருடங்களில் நாம் என்னதான் நினைத்தாலும் ஒருவரை அடிக்க முடியாது என்று நிலை ஏற்பட்டால், அந்த கெட்டது மறைந்து போகும் இல்லையா. இப்படி ஒவ்வொரு நாளும் நாம் கெட்டது என்பதை அழிக்கிறோம், ஆனால் நாம் கெட்டதோடு நல்லதையும் சேர்த்து அளிக்கிறோம் என்பதை யாரும் உணர்வதில்லை.
எதுவும் நிரந்தரமானது அல்ல, நான், நீங்கள் இந்த பத்திகளைப் படிக்க உதவும் ஃபோன் எதுவும். நான் எழுதி இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையானது என்று நானும் நீங்களும் நினைப்பதால் மட்டுமே இந்த கட்டுரை உண்மையாகிறது.
இப்போது மீண்டும் கேட்கிறேன், "நீங்கள் '___________' என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?
ஏமாற்றுக்காரனுக்கு ஏமாற்றுவது நல்லது, கெட்டது என்பது ஏமாந்து போகிறவர்களுக்கு மட்டும்தான்.
コメント