கே தனது கட்டிலை விட்டு எழுந்திருக்காமல் இன்னும் படுத்தேயிருந்தார். அறைக்கு வெளியே இருந்து சப்தங்கள் மெலிதாக அவ்வறையின் பெரிய கதவுகளைத் தாண்டி உள்ளே நுழைந்து கொண்டிருந்தது. பரபரப்பான வாழ்க்கை அவருக்குக் காத்துக்கொண்டிருந்தது. அன்று தான் நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருந்தது. விழாவிற்காக ஒப்பனை செய்துகொள்ள அவர் முன்னரே கிளம்ப வேண்டி இருந்தாலும், சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.
கே கிளம்புவதற்கு இவ்வாறு என்றும் சோம்பேறித்தனம் கொண்டதில்லை. ஆனால் அன்று அவரிடம் ஒரு அயர்ச்சி இருந்தது. அன்று நடக்கவிருக்கும் விழாவில் தான் பேசப்போகும் வார்த்தைகளைப் பற்றி பெரிய முடிவு எடுக்க வேண்டியிருந்தது. எல்லாம் தான் கொண்ட தேடலின் விளைவுதான் என்பதை நினைத்துச் சலித்துக் கொண்டார்.
தனது மனைவியைப் பிரிந்தது முதல்தான் அவர் பரம சாதுவாக மாறிப்போனார் என்று பலர் எண்ணி வந்தார்கள். அவர் சாதுவாக மாறியதனால்தான் தனது மனைவியைப் பிரிந்தார் என்று பலருக்குத் தெரியவில்லை. பல ஆண்டுகளாக இவர்கள் எப்போது பிரிவார்கள் எப்போது பிரிவார்கள் என்று எதிர்பார்த்தவர்களின் எண்ணம் கடந்த ஆறு மாதம் முன் நிறைவேறியது. இருவரின் வீட்டிலும் பேசிப் பார்த்தனர் ஒன்றும் கைகூடவில்லை.
விவகாரத்தின்போதுதான் கே தன் மனைவியை அதீதமாக நேசித்தார். கேவின் பிரச்சினையை அவள் புரிந்துகொண்டு கல்யாணத்திலிருந்து வெளியேறியது கேவிற்கு மகிழ்ச்சியே. ஆனால் அவர் கொண்டுள்ள தேடல் அந்த மகிழ்ச்சியை சில நாட்களில் நீர்த்துப்போகச் செய்தது.
கே யார் மனதையும் காயப்படுத்தாமல் வாழ்ந்து வந்தார். பிறரைக் காயப்படுத்தித் தான் முன்னேறுவதில் எந்த பயனும் அல்ல என்ற முடிவுக்கு வந்தார். சண்டைகளிலிருந்தும், சர்ச்சைகளிலிருந்தும் விலகியே இருந்தார், ஆரம்ப நாட்களில் பல படங்களில் நடித்து, தனக்கென்று ரசிக பட்டாளத்தை உருவாக்கிக்கொண்ட கே அதைப் பின்னாட்களில் வெறுத்தார். படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொள்ளத் தொடங்கினார். அந்தந்த நேரங்களில் அவருக்குள் எழுந்த கவர்ச்சியான எண்ணங்கள் பற்றிய படங்களில் மட்டுமே நடித்தார். ஆனால் அதுபோன்ற படங்கள் அவருக்குச் சொற்பமாகத்தான் வந்தது. கடவுளை அடைய அவர்கொண்ட அக பயணம் அவரை முற்றிலும் மாற்றியது.
முதலில் அவருக்குக் கடவுள் மீது நம்பிக்கை இருந்தது, பின் அதைப் பற்றிய கேள்விகள் எழுந்தது, அதைப்பற்றி ஆராய முனைந்தார், ஏதேதோ தேடிப்படித்தார், கடவுள் நம்பிக்கை காணாமற்போனதாக நினைத்தார், ஆனால் அது அவரோடு எப்போதும் இருந்தது, அவரை சதா வாட்டி எடுத்தது.
கடவுள் நம்பிக்கை கொண்ட ஆத்திகன் கூட கடவுள் இருக்கிறதா என்று தங்களுக்குள் கேள்வி கேட்பார்களா என்று தெரியாது, ஆனால் கடவுள் நம்பிக்கை அல்லாத நாத்திகன் எப்போதும் தினமும், அதைப்பற்றி மறந்தாலும், எதாவது ஒரு தருணம் அவர்களுக்கு அதைப்பற்றி நினைவுபடுத்தும் என்று உறுதியாக நம்பினார். இதைப்பற்றி தன் தந்தையிடம் கே கேட்டபோது.
“உலகத்துல எந்த கெட்ட விஷயம் நடந்தாலும் கடவுள திட்டாம அவங்க நாள் போவாது. தடால்னு அதை பத்தி மனசுக்குள்ள ஒரு விவாதம் நடக்கும். எனக்கும் அந்த மாறி தோணும், இயற்கைய பாத்தா எவ்வளவு அழகா இருக்கு, கடவுள் ஒரு கலைஞனு தோனும், நம்மல மயிர் சிலிர்க்க வைக்கும், ஆனா அதே சமயம் சரியா இயங்க முடியாம இருக்க குழந்தைய பாக்கும்போது, ஏன் இப்டி இருக்கு, கடவுள் மேல வேகமா கோவம் வரும், அப்டி அவதி படுற குழந்தைய ஏன் படைக்கனும்னு கேள்வி வரும், அத பாக்க வச்சு சந்தோஷம் அடையுற கடவுள் கடவுள்தானானு கேள்வி பலமா வரும், ஆனா இதுக்கு எந்த ஆத்திகன்ட்டையும் சரி சாஸ்தரத்துலையும் சரி எந்த பதிலும் கெடையாது! ஏன் என்கிட்டயும் பதில் கெடையாது” என்றார்.
“அப்ப கடவுள் ஒரு ‘அழகான சாடிஸ்ட்’! இல்ல?”
“அப்டியும் சொல்லலாம், அதுதான் சரியான வார்த்தையா இருக்கும் அப்டியொரு பவர பத்தி சொல்றதுக்கு!"
தன் தந்தையிடம் இதைப்பற்றி கேள்வி கேட்டு தன் மனதைச் சரியாக்கிக்கொள்ள நினைத்த கேவிற்கு, ‘அழகான சாடிஸ்ட்’ என்ற சொல் மட்டுமே மிஞ்சியது. ஆனால் அதைப்பற்றிச் சிந்திக்கச் சிந்திக்க கடவுள் பற்றிய அவருடைய கேள்விகள் இன்னும் பன்மடங்கானது.
அவர் நண்பர்களில் சிலர் அவரை இவைபற்றி எல்லாம் சிந்திக்காமல் அறியாமையில் இருக்கச் சொன்னார்கள், அது முட்டாள்தனமாக இருந்தது, இவ்வளவு சிந்திக்கும் வல்லமைகொண்ட மனிதனானவன் எவ்வாறு அறியாமை கொண்டவனாக கண்டுக்காணமல் இருக்க முடியும் என்ற ஆதங்கம் தான் கே மனதுக்குள் மேலோங்கியது. அறியாமை மனித மனதை அமைதிகொள்ள வைத்திருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் தனது கையாலாகா தனத்தை மறைக்க அறியாமையை பின்னால் ஒளிந்து கொள்ளும் செயலை கே வெறுத்தார். பெரும்பான்மை மனிதர்கள் அவ்வாறுதான் உள்ளார்கள் என்பதைக் கேவால் மறுக்கவும் முடியவில்லை. அவரும் சில காலம் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் இருக்க முயன்றார். ஆனால் தன்னுடைய தன்னுணர்வு அவரை விடவில்லை, அவரை பேய் போல் துரத்தியது. நாத்திகனும் சரி, ஆத்திகனும் சரி, இறுதியில் அறியாமை என்ற புள்ளிக்குப் பின்தான் தஞ்சம் புக இறுதியில் வந்தடைகிறார்கள் என்ற முடிவுக்கு வந்தார்.
அவரை சிலர் ஒரு யாத்திரை மேற்கொள்ள அறிவுறுத்தினார்கள். அவரும் கிளம்பினார். தனது பயணத்தை ரகசியமாக வைத்துக்கொண்டார், தானொரு நடிகர் என்பதை யாரும் அறிய முடியாத இடங்களைத் தேடிச் சென்றார். அங்கு அவர் கண்ட காட்சிகள், அவர் சந்தித்த மனிதர்கள் அவர் தேடலை முடித்த வைக்கவில்லை. உண்மையில் அவர் மனதுக்குள் கொழுந்து விட்டு எரியும் அந்த கடவுளின் தேடலை மேலும் வீரியமாக்கியது. அவர் யாத்திரை சென்றபோது தனது மனதுக்குள் அதிகப்படியான வெறுமையை உணர்ந்தார். தான் இந்த யாத்திரையை மேற்கொண்டதே தவறு என்று எண்ணி ஊருக்குத் திரும்பினார்.
கேவின் இந்த மனநிலையை மேலும் குழப்பவும் சரிசெய்யவும் ஒருவர் வந்தார். அவர்தான் நடிகர் எஸ். இருவரும் ஒரே காலத்தில் சினிமாத்துறையில் நுழைந்தார்கள், இவருக்கும் இடையே போட்டி இருந்தது. கால ஓட்டத்தில் அவை மறந்த போனது, மேடைகளில் ஒன்றாக ஏறி தங்களுக்குள் போட்டியே இல்லை என்பதைக் கேவும் எஸ்ஸும் அனைவருக்கும் காட்டினார்கள்.
கே ஊருக்குத் திரும்பிய பின் எஸ்ஸிடமிருந்து ஃபோனில் அழைப்பு வந்தது. பல நாட்களுக்குப் பின் அவர்கள் ஃபோனில் பேசிக்கொண்டார்கள். எஸ் கூறிய முதல் வாக்கியமே கேயை குழப்பியது.
"கே, நாம மறுபடியும் சண்ட போடனும்"
"புரியல, என்ன சொல்றீங்க?"
"நாம மறுபடியும் போட்டி போடனும் கே, நாம சமாதானமா வேல செய்றது சரியில்ல, நாம அப்படி இருக்க கூடாதுன்னு எனக்கு தோனுது"
"ஏன் இப்படி சொல்றீங்க, நாம ஏன் சண்ட போடனும், போட்டி போடனும், அதனால என்ன ஆகபோது?"
"இல்ல கே, நாம சண்ட போட்டாதான், வேல செய்ய முடியும், வாழ்க்கையில எனக்கு பிடிப்பே இல்லாம போது, நமக்குள்ள போட்டி வேனும், அது கேவலமான சண்டையா ஆனாலும் பராவல்ல"
"இல்ல எஸ் என்னால முடியாது, நீங்க ஏன் இப்படி ஆயிட்டீங்க?"
"எல்லாம் எனக்கு தெரியும் கே, நீங்க உங்க வழியில ஒரு விஷயத்தை தேடி போனீங்க, நானும் அதையே தேடி போனே, நமக்கு கிடச்சுது என்னமோ வெறும தான், கரெக்டா?"
எஸ் மேலும் தொடர்ந்தார்,
"நீங்களும் நானும் சண்ட போடறத நிப்பாட்டுன பின்னாடி தான் இவ்வளவு பிரச்சினையும், எனக்குப் பிரச்சினையே இல்லை கே, புரிஞ்சுகோங்க, உங்களுக்கு நல்லா புரியும், முன்னாடி ஒரு பிரச்சினையா நீங்க இருந்தீங்க, அத சரி செய்ய நாம பேசியிருக்கவே கூடாது, அதுக்கு அப்பறமா நாம எதை எதையோ தேடி போனோம், அதுக்கு தீர்வுனு இதுதான்னு நான் நினைக்குறேன்."
"வாழ்க்கையில நாம சண்ட போடுறதுக்கு ஒரு எதிரி வேனும் கே, நாம எதிரி இல்லாம வாழ முடியாது, எதிரிக்கூட சமாதானம் ஆகிட்டா, யாருக்கூடதான் என்ன வாழ்க்க வாழ்றது? உங்களுக்கும் இப்ப பிரச்சினை, பிரச்சினை இல்லங்கிறதுதான், நீங்களும் நானும் இந்நேரம் சண்ட போட்டுகிட்ட இருந்திருந்தா நாம இவ்வளவு பிரச்சினைக்கு வந்திருக்க மாட்டோம். நான் நல்லா யோசிச்சு பாத்துட்டேன், இனிமே உங்க கூட சண்ட போடத்தான் போறேன். நீங்க வரலனாலும், நான் வம்பு இழுப்பேன், நீங்க வந்துதான் ஆகனும்! அதுதான் நடக்கபோது!"
"நீங்க சொல்றது புரியுது, ஆனா எனக்கு சண்ட போட தோணல, நான் இப்படியே அமைதியா இருக்க ஆசப்படறேன்"
"நீங்க அப்டிலாம் ஆச படல கே, நீங்களும் வெறுமைய ஓட்ட ஓடுறீங்க அதுவும் எங்கேயோ, நீங்க தேடுற விஷயம் இங்கதான் இருக்கு, அது நான்தான், நாம மறுபடியும் சண்ட போடனும், அத எதிர்பார்த்து தான் எல்லாரும் வெய்டிங்! உங்க மனசும் சமாதானம் ஆகும், என்னோட மனசும் சமாதானம் ஆகும்!"
கே இடைமறித்து, "அது ஹெல்தியா இருக்காது, கொஞ்ச நாளுல, அது அசிங்கமா மாறிரும் அப்படி நம்ம ஃப்ரெண்ட்ஷீப்ப கெடுத்துக்க வேணாம், நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன், நீங்க என்ன பண்ணாலும் சரி"
"கே, அசிங்கமா மாறுனா மாறட்டுமே, அப்பதான் அதுல நம்ம கவனம் இருக்கும், தன்னால நம்ம வெறும ஓடிப்போவும்! நான் மட்டும் சண்ட போடுறதுல பாயிண்ட்டே இல்ல, நீங்களும் அத அக்னாலேஜ் பண்ணனும், அப்பதான் அது சரியா இருக்கும்"
"இல்ல எஸ் நான் ஒத்துக்க மாட்டேன், நாம நேர்ல இத பத்தி பேசுவோம் போன்ல வேணா, நீங்க எப்போ ஃப்ரீ?"
"பேச்ச மாத்தாதீங்க கே, நான் முன்னாடியே சொன்ன மாறி நீங்க அமைதியா இருந்தாலும், இருக்க மாட்டீங்க என்னோட மன திருப்திக்கு நான் போட்டி போடத்தான் போறேன், வர சிக்ஸ்த் என்னோட படம் ரிலீஸ் ஆகுது, அதுக்கு முன்னாடி ஆடியோ ரிலீஸ் இருக்கு, அன்னைக்கி நான் உங்கள மேடையில மறைமுக சீண்ட போறேன், நாம நேர்ல மீட் பண்ண போறதில்ல, இதுதான் நாம பேச போற கடசி ஃபோன் கால், இனிமே படம் மூலமா பேசிக்கலாம், குட் பை!"
கே பதில் சொல்வதற்கு முன்பே எஸ் அழைப்பைத் துண்டித்தார். மீண்டும் அவரை தொடர்பு கொள்ள முயன்ற போது, எஸ் எடுக்கவில்லை. எஸ் கூறுவது போல் தான் அவரோடு போட்டிப் போட வேண்டுமா என்று கே சிந்தித்துப் பார்த்தார். எஸ் பேசியது முட்டாள்தனம் என்றே அவருக்குப் பட்டது. அவர் மனம் அதற்கு ஒத்துக்கொள்ளக்வில்லை. ஆனால் கேவின் அமைதி எஸ்ஸை நிறுத்தவில்லை, எஸ் சொன்னதுபோல் ஆடியோ ரிலீஸ் அன்று பேசினார்.
ஆடியோ ரிலீஸ் அன்று எஸ் மீண்டும் ஃபோன் செய்தார், ஆனால் அவர் மேடையில் பேசப்போகும்போது. கே கேட்கும்படியாக ஃபோனை தனது சட்டைப் பையில் அப்படியே வைத்தார் எஸ்.
"கடைசியா ஒன்னு மட்டும் சொல்லிக்குறேன், நான் திரும்பி வந்துட்டேன், புதுசா, என்ன ஏதிர்கனும்னு வரவங்களாம் ஓரமா போயிடனும், நான் இப்ப வேற மாறி தேவயில்லாம உரசி பாக்க வேணாம், இவன் போயிட்டான், அவ்வளவுதான் இனிமே வரமாட்டானு நினைச்சவங்க எல்லாம் கொஞ்சம் அமைதியா இருங்க, வந்துட்டேன், இதலாம் வேற யார்க்கிட்டயாச்சும் வச்சுகனும், என்கிட்ட இல்ல, நன்றி வணக்கம்"
யாரைச் சொல்கிறார் என்று தொகுப்பாளர்கள் கேட்டபோது,
"அதே வேற சொல்லனுமா? நான் யார சொல்றேன்னு புரியறவங்களுக்கு புரியும் அவ்வளவுதான்!"
அதன் பின் உடனடியாக அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது. எஸ் மீண்டும் அழைக்கவேயில்லை.
சமூக வலைத்தளங்களில் கேவின் ரசிகர்களை எஸ் ரசிகர்களைக் கலாய்த்துத் தள்ளினர். வம்புக்கு இழுத்தனர். தேவையில்லாமல் பல நாட்கள் கழித்து இந்த சண்டை நடக்கத் தொடங்கியது.
கேவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் இல்லை, வேறு வழி எதுவும் அவர் கண்களுக்குப் புலப்படவில்லை. எதுவும் இல்லாமல் இருப்பதற்கு இது எவ்வளவோ மேல் என்று நினைத்து கே குழப்பமான முடிவுக்கு வந்தார். அந்த குழப்பமே அவரை அன்று காலை அயர்ச்சி கொள்ளச் செய்தது. விழாவிற்குக் கிளம்பினார்.
விழா தொடங்கியது. விழா நேரடியாக இணையத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேடையில் இவர் எறி பேச வேண்டிய தருணம் வந்தது, மேலே ஏறினார். மைக்கை வாங்கி படத்தைப் பற்றி சில வார்த்தைகள் பேசிவிட்டு,
"லாஸ்ட்டா ஒன்னு, நாம கொஞ்ச நாள் அப்படியே பேசாம போனா நாம எதிர்பாக்காத சிலர் மேல வந்த அப்பறம் நம்மல தேவயில்லாம சீண்டி பாக்குறாங்க, அது அவங்க விருப்பம், ஆனா என்ன சீண்டக்கூடாது, என்னைய யாரு சீண்டனும் சீண்டக்கூடாதுனு நான் தான் முடிவு பண்ணணும்!" என்றதும் அரங்கில் அதிர்வலைகள் கிளம்பியது.
நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த எஸ்ஸிற்கு, கே தன்னை பற்றிப் பேசவில்லை எனப் புரிந்தது.
"நாம மேல தூக்கி விட்ட பலர் நம்ம கால வாரிவிட பாக்குறாங்க, அந்த மாறி ஆட்களுக்கு இருக்கு, அத நான் படம் மூலமா பூரவ் பண்றேன், பேசுனா நல்லா இருக்காது இல்லையா?" என்று சிரிப்போடு தன் பேச்சை முடித்தார்.
கே பேசி முடித்ததும், தனது ஃபோனை எடுத்து 'ஆர்' நடிகரின் அழைப்பைத் துண்டித்தார்.
Comments