ஆவிப் பறக்க, பதினாறு இட்லிகள், இட்லிக் கொப்பரையில் பிறக்கிறது. வேக வேக, கருவறையில் குழந்தை வளர்வது போல் இட்லிகள் வெந்து வளர்கிறது.
முதலில் அடித்தட்டில் வைக்கப்பட்டிருந்த நான்கு இட்லிகள் உணர்வு நிலை அடைகின்றன. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றன.
"நான் யார்?"
"நீ யார்?"
"நீ யார் என்று சொல்"
"எனக்குத் தெரியவில்லை"
"எனக்கும் தெரியவில்லை"
"நாம் தான் முதன் முதலில் பிறந்துள்ளோம்" என்றது ஒரு இட்லி.
"நாம் தான் முதல் என்றால், யார் நம்மைப் படைத்தது?"
"யாராக இருக்கும்?"
(பி.கு: இது இட்லிகளின் மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கதையாகும்)
"என்னால் கேள்விதான் கேட்க முடிகிறது, யோசிக்க முடியவில்லை"
திடீரென அவர்கள் மேல் தண்ணீர் சொட்டத் தொடங்கியதும்,
"நம் மீது தண்ணீர் விழுகிறது"
"நம்மைப் படைத்தவரை அழுகிறார், நாம் அவரை பற்றி நோண்ட ஆரம்பித்ததால் அவர் மனமுடைந்து அழுகிறார்"
"கீழே பாருங்கள், நமக்குக் கீழ் ஏற்கனவே தண்ணீர் இருக்கிறது" என்று ஒரு இட்லி கத்த, அனைவரும் கீழே பார்த்தால் தண்ணீர் கொதித்துக் கொண்டு இருந்தது.
"அப்படியென்றால் நமக்கு முன்னரே சிலர் இதைப் பற்றி கேள்வி கேட்டதால் நம்மைப் படைத்தவர் மனமுடைந்து அழுதுள்ளார்"
"அவர்கள் படைத்தவர் யாரென்று கண்டுபிடித்திருக்கக் கூடுமா?"
"கண்டுபிடித்திருக்கலாம்"
"அவர்கள் இப்போது எங்கே?"
"நான் யார்?" என்று மேல் தட்டிலிருந்த வேறொரு நான்கு இட்லிகள் ஒருசேரக் கேள்வி கேட்டது.
அந்த நான்கு இட்லிகளுக்கும் அடித்தட்டிலிருந்த இட்லிகள் தாங்கள் பேசியதை விளக்கிக் கூற முயன்றன. ஆனால் தண்ணீர் அதிகமாகக் கொதிக்க ஆரம்பித்ததால், அடித்தட்டில் இருப்பவர்கள் கூறுவது, அவர்களுக்குச் சரியாகப் புரியவில்லை.
இறுதியில் நம்மைப் படைத்தவர் மேலே இருக்கிறார் என்று அவர்களாகவே ஒரு முடிவுக்கு வந்தனர். அவர்கள் மேல் விழும் தண்ணீரைக் கடவுளின் தீர்த்தமாக நினைத்துக்கொண்டு, "கடவுளே, படைத்தவனே, நாங்கள் என்ன செய்ய வேண்டும் கட்டளையிடுங்கள் தேவனே?" என்று மேல் நோக்கிக் கூச்சலிட்டனர்.
மேலிருந்து இரண்டாவது தட்டில் இருப்பவர்களும் விழித்துக்கொள்கின்றனர்.
"நான் யார்?" என்று மற்றவர்கள்போலே ஆரம்பிக்க, உடனே கடவுளின் கட்டளைக்குக் காத்திருக்கும் இட்லிகள்,
"அப்பனே, நீயா?"
"யாரது?"
"நாங்கள் தான் உங்கள் பிள்ளைகள்"
"இல்லை இல்லை நாங்களும் உங்களை போல்தான்"
"படைத்தவனும் நம்மைப் போல் தான் இருப்பார் போலும்" என்று பக்தி மிகுதியால் ஆனந்த களிப்பாடத் தொடங்கின.
அடித்தட்டில் இருப்பவர்களுக்கு முன்னை விட இப்போது தண்ணீர் அதீதமாகக் கொதிப்பதால் ஒன்றும் விளங்காமல் அமைதியாக மேலே இருப்பவர்கள் பேசுவதைக் கேட்க முயன்றன.
உங்களை போல்தான் நாங்களும் என்று கூறிய தட்டில் இருக்கும் இட்லிகள், ஆனந்தக் களிப்பாடும் இட்லிகளை நினைத்து எரிச்சல் அடைந்தனர்.
"மூடர்கள், நாம் ஒன்று கூறினால், அவர்கள் ஒன்று புரிந்து கொண்டு, இப்படிக் குதிக்கிறார்கள்".
அவர்களும் மேலும் தண்ணீர் மேல் விழ, அது என்ன என்று விவாதிக்கத் தொடங்குகிறார்கள். அதில் இரண்டு இட்லிகள்,
"இந்த தண்ணீர் என்னவாக இருக்கும்?"
"நமக்கு நல்ல உணர்வையும் தருகிறது அதேவேளையில் எனக்கு இது ஆபத்தாகவும் தோன்றுகிறது, என்னவாக இருக்கும்?"
"ஆபத்து எல்லாம் இல்லை, இவை நல்லவை தான்"
"நம்மை இவற்றிலிருந்து காப்பாற்றிக்கொள்ளுவதே நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது"
"ஆமாம், எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது", என்று அமைதியாக இருந்த இன்னொரு இட்லி ஆபத்தென்று வழிமொழிந்த இட்லியோடு உடன்பட்டது.
"எனக்கு அப்படித் தோன்றவில்லை, நீங்கள் கூறுவது போல் இருக்க வாய்ப்பில்லை, நீங்கள் ஏன் இப்படிச் சிந்திக்கிறீர்கள்? அவர்கள் கூறுவதை நீ ஏற்றுக்கொள்கிறாயா என்ன?" என்று அமைதியாகச் சிந்தித்துக்கொண்டு இருந்த மற்றொரு இட்லியைக் கேட்டது.
"எனக்கு நீ சொல்வதுதான் சரி என்று தோன்றுகிறது, படைத்தலும், காத்தலும், அழித்தலும் இறைவனுடைய விளையாட்டாகும்".
"எது இதுவெல்லாம் விளையாட்டா, சுத்த பைத்தியக்காரத்தனம்"
"நான் கூறுவதா, இல்லை இறைவனா?"
"எல்லாம் தான்"
"என்ன தைரியம் உனக்கு"
"இதைக் கூறுவதற்குத் தைரியம் தேவையில்லை, என்னால் மீண்டும் சொல்ல முடியும், பைத்தியக்காரத்தனம், பைத்தியக்காரத்தனம், பைத்தியக்காரத்தனம்!"
திடீரென தண்ணீர் கொதிப்பது குறைகிறது.
"ஏன் தண்ணீர் கொதிப்பது திடீரென குறைந்துவிட்டது இது எதை உணர்த்துகிறது?" என்று அடித்தட்டில் இருக்கும் இட்லிகள் கேள்வி கேட்டது.
"எது தண்ணீர் கொதிப்பது நின்றுவிட்டதா?" என்று கீழிருந்து இரண்டாவது தட்டில் உள்ள இட்லிகள் திருப்பி கேட்டன.
"நீதான் பைத்தியம், இறைவனைப் பைத்தியம் என்கிறாயே, உன்னை என்ன செய்ய?"
"நான் அப்படிக் கூறுவதற்கு எனக்கு முழு உரிமை உள்ளது, வீணாக வாக்குவாதம் செய்யாதே"
கீழுதட்டில் இருப்பவர்களுக்கு இவர்கள் எதற்காகச் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்று புரிந்துகொண்டு அவர்களை அமைதியாக இருக்கும்படி கத்துகிறார்கள்.
"அமைதி! அமைதி! அமைதியாக இருந்து தொலையுங்கள்!"
"தேவர்களுக்குள் சண்டை நடக்கிறது நீங்கள் அமைதியாக இருங்கள், என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று கேட்க முடியவில்லை" என்று கீழிருந்து இரண்டாவது தட்டு இட்லிகள் சத்தம் போட்டன.
அனைவரும் இட்ட கூச்சல் குழப்பத்தில் அனைத்து தட்டுக்கும் மேலே உள்ள முதலாவது தட்டிலுள்ள இட்லிகள் முழித்துக் கொள்கின்றன.
"நான் யார்?, அதானே? இதை இன்னும் எத்தனை பேர் கூறுவார்கள், தாங்க முடியவில்லை!" என்று அடித்தட்டு இட்லிகள் சத்தமிட்டது.
இதை அரசல் புரசலாகக் கேட்ட முழித்துக் கொண்ட இட்லிகள்,"நாம் கேட்கப் போவதை முன்னரே தெரிந்து வைத்திருக்கிறார்கள், அவர்கள் அதிபுத்திசாலிகள் தான்."
"நாங்கள் கூறப் போவது உங்களுக்கு எப்படி முன்னரே தெரிந்த…"
மீண்டும் தண்ணீர் அதீதமாகக் கொதிக்கத் தொடங்கியது.
முதல் தட்டில் உள்ள இட்லிகள் கேட்ட கேள்வி அடித்தட்டு இட்லிகளுக்குக் கேட்கவில்லை.
திடீரென அவர்கள் மேலும் தண்ணீர் சொட்டுவதைக் கவனிக்கிறார்கள்,
"என்ன இது நம் மேல் விழுகிறதே?"
"சூடாக அல்லவா இருக்கிறது, என்னவாக இருக்கும்?"
"கவனியுங்கள், மேலே இருப்பதில் மோதி, இவை நம் மேல் வந்து விழுகிறது, அப்படியென்றால் இது…"
"கீழிருந்து வருவதாகத் தான் இருக்கும், கீழே இருப்பவர்கள் இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்?"
"இருக்காது, எனக்கு அப்படித் தோன்றவில்லை, எனக்கு என்னமோ இவற்றால் தான் நாம் உருவானோம் என்று தோன்றுகிறது!"
அந்த இட்லிகள் அதை நன்றாக ஆராய்ந்து, இந்த தண்ணீரானது, கீழிருந்து மேலே வந்து கொப்பரை மூடியில் மோதி அதனால் ஏற்படும் சூட்டினால் தாங்கள் உருவாக்கப்படுகிறோம் என்றும், மேலும் இத்துணையும் எப்போதோ ஏற்பட்ட சூட்டினால்தான் நடந்திருக்கிறது என்று கண்டுபிடிக்கின்றன. இவர்கள் அதைத் தெரியப்படுத்தக் கீழே உள்ளவர்களை அழைக்க முயல்கிறார்கள், ஆனால் மற்ற தட்டில் இருப்பவர்களால் தண்ணீர் கொதிக்கும் சத்தத்தின் காரணமாக அதைக் காது கொடுத்துக் கேட்க முடியவில்லை.
அப்போது திடீரென கொப்பரைத் திறக்கப்படுகிறது, வெளிச்சத்தைக் கண்டதும் இவர்கள் வாயடைத்துப் போகிறார்கள். அந்த வெளிச்சத்தில் கூர்மையான பொருள், மேல் தட்டில் உள்ளவர்களை ஒவ்வொன்றாகப் பதம் பார்க்கிறது, அதனால் காயம் ஏற்பட்டு அவர்களால் பேச முடியாமல் போகிறது.
மீண்டும் கொப்பரை மூடப்பட்டு, தண்ணீர் கொதிப்பதும் நின்றுவிடுகிறது. அனைத்தும் அமைதியான பின் நான்காவது தட்டில் உள்ளவர்கள் மற்ற தட்டில் இருப்பவர்களை அழைக்கிறார்கள்.
"அந்த வெளிச்சம், அது என்ன?"
"ஆமாம் என்ன அது?"
"அப்பனா அது? அவனைக் கண்டீர்களா?"
"அந்த வாய்ப்பு எனக்கு வாய்க்கவில்லையே"
"மூடர்கள், கத்தாமல் இருங்கள், மேல் இருப்பவர்கள் பேசுவது எதுவும் கேட்கவில்லை, பேசுகிறார்களா என்றே எங்களுக்குத் தெரியவில்லை!"
அப்போது மீண்டும் கொப்பரை திறக்கப்படுகிறது, ஒவ்வொரு தட்டாக ஒரு மர்மப் பொருள் அவற்றை வெளியே எடுக்கிறது. வெளிச்சத்தால் மீண்டும் வாயடைத்துப் போகிறார்கள். முதல் தட்டில் இருப்பவர்கள் நடப்பது அனைத்தையும் பேச முடியாமல் பார்க்கிறார்கள். அவர்கள் மேல் உள்ள தண்ணீரை வடிய விடும்போது, அவர்கள் இவ்வளவு நேரம் வெந்த கொப்பரையை முழுமையாகக் காண்கிறார்கள், தங்களை உருவாக்கியவர் இவர்களா என்று அதிர்ச்சியில் பார்க்கிறார்கள், பின் வேகமாக அவர்கள் ஒவ்வொருவரும் வேறொரு சட்டியில் போடப்படுகிறார்கள். ஒன்றின் மேல் ஒன்றாகப் போட்டதால், அவர்களின் காயம் அதிகமானது, மற்ற தட்டில் உள்ளவர்களும் வந்த விழ அனைவருக்கும் காயம் ஏற்படுகிறது. இறுதியில் அவர்கள் இருக்கும் சட்டியும் ஓர் மூடியால் மூடப்படுகிறது.
"ஐயோ! என்ன நடக்கிறது, இவர்கள்தான் நம் படைத்தவர்களா?"
"நாம் இதற்குள்தான் பிறந்தோமா, வலி பொறுக்க முடியவில்லை?"
"ஆ…இவர்கள் நம்மைப் போல் துளியும் இல்லையே"
"அப்போது நாம் இவ்வளவு காலம் நினைத்ததெல்லாம் பொய்யா?"
"நம் வாழ்க்கையே பொய்யா? இப்படி நம்மைக் காயப்படுத்துகிறார்களே!"
"இவர்கள் நம்மைக் கண்டிப்பாகப் படைத்திருக்க வாய்ப்பில்லை! காயப்படுத்துபவன் என்றும் படைத்தவனாக முடியாது!"
"சும்மா இருந்து தொலையும்"
"இதுதான் இறைவனுடைய விளையாட்டு"
"பைத்தியமே சும்மா இரு, அய்யோ நகர முடியவில்லையே"
"அடுத்த என்ன நடக்கப் போகிறது?"
பெருத்த வலியோடு பல கேள்விகளைக் காயப்பட்ட ஒவ்வொரு இட்லிக்குள்ளும் கேட்டுக்கொண்டிருக்க, திடீரென அவர்கள் தூக்கி வீசப்பட்ட சட்டி திறந்தது. அதே மர்மப் பொருள் ஒவ்வொன்றாக இவர்களை மேலே தூக்கியது. அனைவரும் ஒவ்வொருவராகத் தூக்கிச் செல்வதைக் கண்டு முதல் தட்டிலிருந்த இட்லிகள் வேதனைப்பட்டன.
அவர்கள் அனைவரும் வேறொரு பாத்திரத்தில் போடப்பட்டனர். நடப்பது என்ன என்று நினைத்து முடிப்பதற்குள், இவர்கள் மேல் சூடாக வேறொரு திரவம் ஏதோ ஊற்றப்பட்டது. இவர்கள் சூட்டில் பிறந்தவர்கள் என்றாலும், இப்போது இந்த சூட்டை அவர்களால் தாங்க முடியவில்லை,
"ஆ, என்ன இது?"
"வலி பொறுக்க முடியவில்லையே!"
"நாம் என்ன தவறு செய்தோம், இப்படித் துன்பப்பட?"
"இதன் அர்த்தம் தான் என்…"
இட்லிகள் தனித்தனியாகப் பிரித்து எடுக்கப்பட்டது. நான்கு மர்மப் பொருள்களும் இவர்களை அரைத்துச் சாகடித்தது.
நடந்தேறிய அனைத்தையும் இட்லிகளின் பிறப்பிலிருந்து இறப்பு வரை, ஒவ்வொன்றிலும் தன் சொந்தங்களை இழந்த உப்பு அதற்கென அடைக்கப்பட்ட ஜாடியிலிருந்து சோகமாகப் பார்த்துக்கொண்டு இருந்தது.
Comments