top of page
Writer's picturePari

அதனால் புத்தகங்களை வாசிக்காதீர்கள்!


Ignorance might be bliss for the ignorant, but for the rest of us it's a right fucking pain in the arse - Ricky Gervais

கடந்த இரண்டு வருடங்களில் நான் செய்த மிகப்பெரிய நன்மையும் தீமையும் இரண்டுமே புத்தகங்கள் வாசித்தது தான். புத்தகங்கள் வாசித்தது நல்லது என்ற வகையில் நான் அதன் மூலம் பலவற்றை அறிந்து கொண்டேன். நான் வேலை பார்க்கும் இடங்களில் புத்தகங்கள் வாசிப்பதால் மதிக்கப்பட்டேன். என்னால் எவரோடும் பொறுமையாக வாதிட முடிந்தது. என்னால் நீண்ட நேரம் உட்கார்ந்து எழுத முடிந்தது. புதுவகையான சிந்தனைகள் எனக்குத் தோன்றின. அதைவைத்துப் பல கட்டுரைகள், கதைகள் என்னால் எழுத முடிந்தது. ரஷ்ய இலக்கியம், ஜப்பானிய இலக்கியம், ஜெர்மானிய இலக்கியம் என்று பல இலக்கியங்களைத் தேடி வாசித்தேன். எதோ ஒரு நாட்டில், எதோ ஒரு காலத்தில் எழுதியதை வாசித்தபோது மகிழ்ச்சியடைந்தேன்.


வீட்டை விட்டு கால் எடுத்து வைக்காமல் நான் பல தேசங்கள் சென்று புத்தகங்கள் மூலம் பரதேசி ஆனேன். ஆனால் இவை நன்மைகள் மட்டுமே.


புத்தகங்களால் நான் உலகத்தின் தோற்றத்தைக் கண்டு அடைய முயன்றேன். பிரபஞ்சம், கடவுளின் இருப்பு, வாழ்க்கை, இறுதியாக அர்த்தம் என அனைத்து குறித்தும் அறிந்து கொள்ளத் தேடித் தேடி வாசித்தேன். உண்மையில் இவற்றை அடைய எனது கொள்கைகள் என்று நான் கடைப்பிடித்து வந்ததைக் கழற்றி தூக்கி எறிந்தேன். கடவுள் நம்பிக்கை இல்லாத நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் மீது நம்பிக்கை வைக்காமல் இருக்கத் தொடங்கினேன். இவற்றையெல்லாம் அடைய விரும்புவர் தீர்மானமான கொள்கைகள் கொண்டவர்கள் இதைத் தேடி வர முடியாது, வந்தாலும் இறுதியில் அவற்றை உதிர்ந்தே ஆக வேண்டும்.


அவ்வாறு ஒருவர் அவற்றை உதிரும் போது, அது அவர்களை வெறுமை என்னும் பேயிடம் அழைத்துச் செல்லும், நான் அந்த பேயிடம் சிக்கிக்கொண்டேன். என்னால் அதிலிருந்து மீண்டும் மீளவே முடியவில்லை. அதற்குப் பழகி இப்போது அந்த எண்ணங்களை, தலைமுடியைப் போல் என்னதான் கத்தரித்தாலும் மீண்டும் மீண்டும் வளர்ந்து என்னுடன் பயணிக்கிறது.


நான் புத்தகங்கள் வாசித்ததால் இவ்வாறு மாற்றமடைந்தேன் என்று கூற மாட்டேன், கொள்கைகள் கைவிட்டுக் குறிப்பிட்ட சில புத்தகங்களைப் படித்ததால் இவ்வாறு மாறினேன். குறிப்பாக மானுடவியல், சமூகவியல் மற்றும் உளவியல் நிறைந்த புத்தகங்களைப் படித்ததால் என்னை நானே இப்படி ஆகிக்கொண்டேன். தினமும் நரகம் போல் இருக்கிறது. இன்று திடீரென்று அழகை வந்துவிட்டது, வாழ்க்கையில் எனக்கு என்ன வேண்டும் என்றே என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. எனக்கு வாழ்க்கையில் வேறெந்த பிரச்சினையும் இல்லை, அதுதான் என்னுடைய பிரச்சினை. வழி தெரியாமல் பரதேசியால் எங்கும் செல்ல முடியாது. அழும் குழந்தையை எவ்வாறு சமாதானம் செய்வது என்று தெரியாமல் முழிக்கும் தாயைப் போல் முழித்துக்கொண்டிருக்கிறேன்.

அதனால் நான் படித்த புத்தகங்கள் இப்படி என்னை மாற்றி விட்டது என்று கூற‌ மாட்டேன். வாசிக்கலாம். ஆனால் கொண்ட கொள்கையில் விட்டு விடாமல் அதைத் தொட்டே இருங்கள். வாழ்க்கையில் வாழ சில கொள்கைகள் தேவை, அதை கடைப்பிடியுங்கள், கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள், விலகாது நில்லுங்கள்.‌ வாழ்க்கையில் உங்களால் அடைய‌‌ முடியாத லட்சியத்தை வகுத்துக்கொண்டு அதை நோக்கி அன்றாடம் வாழுங்கள். கொள்கையற்ற, லட்சியமற்ற மனிதனின் நிலை மோசமானது.


கரையில் இருப்பவனுக்கு ஆற்றில் நிற்பவனைப் பார்க்க அருமையாக இருக்கும், ஆற்றில் நிற்பவனைப் பார்க்கக் கரையில் இருப்பவனுக்கு அருமையாக இருக்கும். எனக்குக் கரையும் இல்லை, தண்ணீருமில்லை, அந்த இருவரும் இல்லை. வெறும் வெறுமையால் மட்டுமே நிறைந்திருக்கிறது.


வாழ்க்கை, அர்த்தம், கடவுள்‌ இருப்பு, பிரபஞ்சம் பற்றி புத்தகங்களைப் வாசிக்காதீர். இவற்றைத் தவிர்த்து வாசிக்க முடிந்தால் வாசியுங்கள், இல்லையென்றால் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து அதைப் பற்றிய புத்தகங்களை வாசியுங்கள், அவை உங்களை சமூகத்தோடு ஒன்றிணைத்து ஓய்வில்லாத மனிதனாக வைத்துக்கொள்ளும்.


வாழ்க்கையில் வாழ அர்த்தமும், அறியாமையும் கண்டிப்பாகத் தேவை, அதனால்‌ புத்தகங்களை வாசிக்காதீர்கள்!


இன்று தஸ்தவெஸ்கியின் நினைவுநாள், மேலே எழுதியதை அவருடைய இரண்டு வாக்கியங்கள் மூலம் சுருக்கமாகக் கூறுகிறேன்,

Pain and suffering are always inevitable for a large intelligence and a deep heart.
To think too much is a disease.
82 views0 comments

Recent Posts

See All

Comments


This image has three writers Camus, Dostoevsky & Kafka with a quote
bottom of page