top of page
Writer's picturePari

நிலவறைக் குறிப்புகள் வாசிப்பனுபவம்



கனவான்களே! ஒரு மனிதன் முழுமையான தன்னுணர்வுடன் இருப்பதும் கூட ஒரு நோய்தான்.

தன்னுணர்வு நோய் என்று தஸ்தயெவ்ஸ்கி சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியுமா? முடியும். உண்மையில் அதிகப்படியான தன்னுணர்வு நோய்தான். அது நம்மை அதிகப்படியாகச் சிந்திக்க வைக்கும். ஒரு விடயம் மேல் நாம் தேவையில்லாமல் நம் மனதைச் செலுத்தி அதிகப்படியாகச் சிந்திப்போம். நமது இருத்தலைப் பற்றி அளவுக்கு மீறிச் சிந்திப்போம், அதனால் நம்மால் இயல்பாக இயங்க முடியாது, சின்ன சின்ன விடயங்களை நினைத்து வருந்துவோம், அதைப் பற்றித் தெரிந்துகொள்ளாமலே இருந்து இருக்கலாம் என்று நினைப்போம். இது நம்மை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தும். யார் என்ன செய்தாலும், எதைச் சொன்னாலும் சதா எதாவது கேள்வி நம்முள் எழுந்து கொண்டே இருக்கும். அவர் என்ன நினைப்பார், இவர் என்ன நினைப்பார், அவர் ஏன் அப்படி நினைக்கிறார் என்று நம்முள் முட்டி மோதிக்கொண்டே இருப்போம். நம் மனதை அமைதியான நிலைக்கு மீண்டும் கொண்டு வர இயலாது. ஒரு பூச்சியைப் பார்த்தால் கூட அதனுடைய வாழ்வைப் பற்றிச் சிந்திப்போம். அன்றாடம் நாம் வாழும் பார்க்கும் அனைத்தும் மீதான நமது பார்வை தனித்தே இருக்கும். எதையும் மறக்காமல் நினைவு வைத்திருப்போம். ஏன் ஏன் என்று கேள்வி எழுந்துகொண்டே இருக்கும்.


இந்த நாவலிலும் வரும் நிலவறை மனிதனும் அவ்வாறு தான் இருக்கிறான், அவனால் இயல்பாக இயங்க முடியாமல் போகிறது. அவன் தன்னை மற்றவர்களிடம் இருந்து விடுவித்துக்கொள்கிறான். முழுமையான தன்னுணர்வின் விளைவு அவனை எந்தச் செயலும் செய்ய விடாமல் தடுக்கிறது, தான் அப்படி இருப்பதற்குப் பதிலாக ஒரு சோம்பேறியாகக் கூட இருக்க ஆசைப்படுகிறான். தன்னை ஒரு வரையறைக்குள் உட்படுத்திக்கொள்ள முடியவில்லையே என‌ வருந்துகிறான். தனக்கு என்ன வேண்டுமென்று உண்மையில் கண்டுணர முடியாமல் தவிக்கிறான்.


உதாரணமாக நாவலின் இரண்டாம் பகுதியில் நிலவறை மனிதனை ஒரு கிளப்பில் ஒருவர் அவனிடம் 'நகர்ந்து நிற்கவும்' என்றெல்லாம் சொல்லாமல், அவரே இவனை நகர்த்தி விட்டு முன்னேறிச் செல்வார். இதனால் தன்னை அவர் ஒரு பொருட்டாகக் கூட கருதாமல் அவ்வாறு செய்தது தன்னை ஒரு ஈ போன்று உணர வைத்ததாக நினைத்து அவன் கோபமடைகிறான். அதனால் அந்த நபரைப்பழிவாங்கத் திட்டம் தீட்டுகிறான். அவரை மக்களோடு மக்களாகக் கூட்டமான இடத்தில் நடந்து வரும்போது இடித்துவிட்டு எதையும் கண்டுகொள்ளாமல் செல்ல வேண்டும் என்று முடிவு செய்கிறான். ஆனால் தன் இழிவான நிலையில், அதாவது தன்னுடைய கிழிந்த கந்தலான கோட்டை போட்டுக்கொண்டு அவரை இடிப்பது சரியாக இருக்காது, அது தன்னுடைய மரியாதையே நிலை நிறுத்துவதாக இருக்காது என்று எண்ணி, அவரை இடிப்பதற்காக, தனது சக ஊழியரிடம் கடன் வாங்கி, புதிதாக ஓவர் கோட்டு வாங்கி அதைப் போட்டுக்கொண்டு அவரை இடிக்க முயல்கிறான். இதுபோன்று இயல்பான நகர்த்தி விடும் காரணங்களுக்குக் கூட நிலவறை மனிதன் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறான், அதற்குக் காரணம் அவனுடைய அதிகப்படியான தன்னுணர்வு தான். இப்படியொரு பழி வாங்கும் படலத்தை நான் இதுவரை வாசித்ததும் இல்லை.


துன்பம்தான் தன்னுணர்வுக்கு வழி வகுக்கிறது என்று ஒரு இடத்தில் வருகிறது. அது நூற்றுக்கு நூறு உண்மை, நாம் எப்போதெல்லாம் துன்பத்தில் விழைகிறோமோ, அப்போதெல்லாம் நமக்குத் தன்னுணர்வு கூடுகிறது. நம்மைப் பிழைத்திருக்க வைப்பதும் அதே துன்பம், நெருப்பினால் சுட்ட பிறகோ, உறவில் யாரேனும் எதுவும் தவறாக எதையாவது கூறிய பிறகோ, அந்த துன்பத்தை அனுபவித்த பிறகு நாம் அது பக்கத்தில் கூட செல்ல மாட்டோம். அதே வேளையில் ஒருகட்டத்தில் நாம் அந்த துன்பத்தின் மீது காதலும் கொள்கிறோம் என்கிறான் நிலவறை மனிதன். இதுவொரு விந்தையான செயல்தான், வழியச் சென்று நாம் சில நேரங்களில் துன்பத்தை நாடுகிறோம் என்பதும் உண்மைதான்.


முதல் பகுதி குறிப்புகள் முழுக்க முழுக்க நிலவறை மனிதன் தத்துவார்த்த ரீதியாகத் தான் நினைப்பது என்ன என்று எழுதுகிறான். இரண்டாம் பகுதி தனது கடந்தகால சில நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்கிறான். முதல் பகுதி குறிப்புகள் வாசிக்கும் எவரையும் மிரளவைக்கும், அந்த பகுதியை மட்டும் நான் நாவலை முடித்த பிறகு மீண்டும் ஒருமுறை முழுவதும் வாசித்தேன். தஸ்தயெவ்ஸ்கி மனிதனை ஆராய்ந்துள்ள மற்றொரு நாவல்தான் இது. தனிமனித சுதந்திரம், உரிமைகள், சட்டங்கள், கோட்பாடுகள், விருப்பங்கள், இலட்சியங்கள் என அனைத்து பற்றியும் தத்துவார்த்த ரீதியாக நிலவறை மனிதன் மூலம் நம்மிடம் விவாதிக்கிறார். ஒரு இடத்தில் இவ்வாறு குறிப்பு வருகிறது,


ஒரு புறம் எல்லாமே நேர்த்தியாகவும் அறிவுப்பூர்வமாகவும் இருந்தாலும் மனிதர்கள் மிக மோசமான முறையில் சலிப்படைந்து போயிருப்பார்கள். (எல்லாமே கணக்கிடப்பட்டும், அட்டவணைப்படுத்தப்பட்டும் இருக்கும்போது அவர்கள் தாமாகச் செய்வதற்கு எதுவுமே இருக்காது). அவர்கள் அப்படிச் சலிப்படைந்து போக மாட்டார்கள் என்று உத்தரவாதமாகச் சொல்வதற்கு வழியே இல்லை. (இதுவே என் கருத்து).

இங்கு அவர் அட்டவணப்படுத்தபடும் என்று சொல்வது மனிதனுடைய இயல்புகளை, உணர்வுகளை, இயற்கை விதிகளை மற்றும் மரணத்தை முதலிய அனைத்தையும். இன்னது இப்படிதான் இயங்குகிறது என்று மனிதனால் கண்டுபிடிக்க முடியும் என்கிறார், அதில் வெற்றி பெற்ற பின் அவனுக்கு வேறெதுவும் செய்ய இருக்காது என்கிறார்.


முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விதி என்றும் அவர்களால் நிரூபித்துவிட முடிகிறதென்றால் பிறகு எனக்கென்று என்ன சுதந்திரம் எஞ்சியிருக்கிறது? நான் பெரிய அறிவாளியாகவோ, பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவனாகவோ இருந்தால்தான் என்ன பயன்?

தஸ்தயெவ்ஸ்கி பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர், அன்று சோசலிய மாறுதலுக்கு ரஷ்யா தயாராகிக் கொண்டிருந்தது, அதை வைத்தே தஸ்தயெவ்ஸ்கி எழுதினார், ஆனால் இன்றும் அதே நிகழ்கிறது. இதைத் தனது அனைத்து நாவல்களிலும் பதிவு செய்துள்ளார். உண்மையில் இப்போதே நாம் பல கண்டுபிடிப்புகளால் சலிப்படைந்துவிட்டோம், சிலர் அதை மறுக்கலாம், ஆனால் அதுதான் உண்மை. மனிதர்கள் செய்ய எதுவுமே இல்லாமல் இருக்கும் ஒரு கனவு உலகத்தை நோக்கித் தான் நாம் நடைபோட்டுக் கொண்டு இருக்கிறோம். மரணத்தை நாம் வீழ்த்திய பிறகென்ன நடக்கும்? பல லட்சக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்து நாம் சாதிக்கப்போவது என்ன? அதன் பின் மனிதனுடைய தேடல் என்னவாகும்? அதை தஸ்தயெவ்ஸ்கி இப்படிக் கேட்கிறார்,


ஒரு சதுரங்க ஆட்டக்காரனைப் போன்றவனான அவனுக்கு இலக்கை‌ அடைவதற்கான முயற்சியில்தான் ஆர்வமே தவிர இலக்கின் மீது இல்லை.

உண்மையில் நாம் இலக்கை அடைந்த பிறகு அதன் மேல் எரிச்சல் அடைகிறோம், அதன் பின் அதை வைத்து நாம் என்ன செய்யவேண்டும் என்று தெரியாமல் நாம் முழிக்கின்றோம். டோபமைனைதான் தஸ்தயெவ்ஸ்கி சொல்கிறார். நமக்கு ஒரு பொருளை வாங்கி அந்த பொருளைப் பயன்படுத்துவதில் இன்பம் இல்லை, அதை அடைய வேண்டும் என்ற தேவை தான் நம்மை உந்தி தள்ளுகிறது. உறவுகளில் இதை நான் உணர்ந்தது உண்டு. நான் என் வாழ்வில் சிலரின் நடப்பை, கவனத்தை அடைய வேண்டும் என்று நினைத்தது அதற்காக முயற்சிகள் எடுத்து அதை அடைந்தேன். ஆனால் அவற்றை நான் தூரத்தில் நின்று பார்த்ததால் தான் அது அருமையாக இருந்தது, அருகில் சென்று பழகிய போது அது அருவருப்பாகவே இருந்தது. இதனாலேயே சிலவற்றை நாம் தூரத்திலிருந்து பார்ப்பது நன்று.


நாம் இப்படிதான் சிந்திக்க வேண்டும் இப்படிதான் நடக்க வேண்டும் என்ற ஒழுங்கு அமைப்புக்களைக் கோட்பாடுகளை ஏன் உருவாக்க வேண்டும் என்று கேட்கிறார், அப்படி உருவாக்க நினைப்பவர்களைச் சாடுகிறார். நன்மைகளை மட்டுமே சார்ந்து ஏன் அனைத்து அமைப்புகளும் இருக்க வேண்டும் என்று கேட்கிறார், அப்படி என்னதான் அமைப்புக்கள் உருவாக்கினாலும், கண்டிப்பாக ஒருவராவது அந்த நன்மை பயக்கும் செயல்களிலிருந்து விலகி தன்னை மனிதன் என்று நிலை நிறுத்திக்கொள்ள தன் விருப்பம் போல் எதையேனும் நிச்சயமாகச் செய்வான் என்கிறார். அப்படிச் செய்யவில்லை என்றால் அவன் ஒரு ஆர்கன் என்ற இசைக்கருவி போல் ஆகிவிடுவான், அப்படி மரக்கட்டையாக மாறி என்ன பயன் என்று கடுமையாகக் கேட்கிறார். உணர்ச்சிகள் கொண்டவன்தான் மனிதன் அப்படி யாரோ உருவாக்கி வைத்த விதிகளின் அடிப்படையில் நான் வாழ என்ன இருக்கிறது? இந்த சம்பிரதாயத்தைத்தான் நீ பின்பற்ற வேண்டும், இப்படிதான் நீ நடக்க வேண்டும் என்று யாரோ சொல்லி வைத்தாற்போல் நான் ஏன் நடக்க வேண்டும்? அப்படிச் செய்வதால் எனக்கான தனிமனித சுதந்திரம் என்ன இருக்கிறது?


அதே வேளையில் நமக்கு அதிகப்படியான சுதந்திரம் தந்தாலும் நாம் அதை யாரிடமாவது தந்து சரண் அடையவே பார்ப்போம், நமக்கு ஒழுங்கு தேவைதான் ஆனால் முழுவதும் இல்லை. மதங்கள் தோன்றியது இதன் பொருட்டுதான். இதைப் பற்றி தஸ்தயெவ்ஸ்கி கரமசோவ் சகோதரர்கள் கதையில் தலைமை விசாரணையாளன் என்ற பகுதியில் விரிவாகச் சித்தரித்திருப்பார். இதிலும் அதே போல் இவ்வாறு எழுதியுள்ளார்,


நம்மில் எவருக்காவது சற்று சுதந்திரம் தந்து அவரைப் பிணைத்திருக்கும் தளைகளிலிருந்து அவரை விடுவித்து அவரது செயல் பாடுகளை விரிவுபடுத்தி; ஒழுக்க அளவுகோல்களைக் கொஞ்சம் தளர்த்திவிட்டால் போதும். நான் நிச்சயமாகச் சொல்கிறேன், நாம் உடனேயே நம்மீது கட்டுப்பாடுகள் வேண்டும் என்று இறைஞ்சத் தொடங்கிவிடுவோம்.

ஒருபக்கம் நாம் கட்டுப்பாட்டுக்களை கேட்கிறோம், மறுபக்கம் விடுதலையும் கேட்கிறோம். நாம் உண்மையில் விந்தையானவர்கள் தான். நமக்கு என்னதான் பல தேர்வுகள் தந்தாலும் நம்மால் உறுதியாக ஒன்றைத் தேர்வு செய்ய முடியாது. பலவகையான தேர்வுகள் நம்மை உண்மையில் மூச்சடைய வைக்கிறது. அணிகலன்கள் வாங்கும்போதும், உணவகங்களில் நாம் குழம்பிப் போவதும் இதனால்தான், அத்துணை உடைகளும், உணவு வகைகளும் இருப்பதால் நாம் உடனே தேர்ந்தெடுக்க முடியாமல் தவிக்கிறோம்.

நிலவறை மனிதன் மூலம் நம்மிடம் ஒன்றைக் கேட்கிறான், தனக்கு இரண்டும் இரண்டும் நான்கு பார்க்கக் கவர்ச்சியாகவும் இருந்தாலும் தனக்கு இரண்டும் இரண்டும் ஐந்து கூடுதல் கவர்ச்சியாக இருக்கிறது என்கிறான். ஏனென்றால் அது அவனுடைய தனிமனித விருப்பம், சுதந்திரம்.


இந்த நாவலில் வரும் நிலவறை மனிதன் போன்றுதான் நாமும், கோழையாகவும் வெறுப்பு கொண்டவர்களாகவும், மற்றவர்களைப் பற்றி மதிப்பீட்டு செய்துகொண்டு, சுயமரியாதை கிஞ்சிற்றும் இல்லாமல் இருக்கிறோம். ஆனால் இதையெல்லாம் மறைத்து வைத்துவிட்டு மற்றவர்களிடம் காரியம் நடப்பதற்காகப் பல முகமூடியை அணிந்துகொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். அதைத்தான் தஸ்தயெவ்ஸ்கி இந்த நாவலில் பக்கத்துக்குப் பக்கம் படைத்துள்ளார்.


இந்த நாவல்தான் இருத்தலியல் பற்றி எழுதப்பட்ட முதல் முதலாக எழுதப்பட்ட நாவல் என்று பட்டியல் போட்டுள்ளனர். இதுதான் பிற்காலத்தில் தஸ்தயெவ்ஸ்கியால் ஈர்க்கப்பட்ட பலர் இந்நாவலின் தாக்கத்தில் பல படைப்புகளைப் படைத்துள்ளனர். இதில் நிலவறை மனிதன் தன்னால் ஒரு பூச்சியாகக் கூட மாற முடியவில்லை என்று வருத்தப்பட்டுக் கொள்கிறான். இந்த தாக்கத்தில் தான் காஃப்கா தனது 'உருமாற்றம்' நாவலை எழுதி இருப்பார். இதில் வரும் அபத்தம் பார்வைகள் மூலமாகத்தான் ஆல்பர் காம்யு தனது அபத்தவாத்தை நிறுவியிருப்பார். அவருடைய 'அந்நியன்' நாவலில் மெர்சோ கதாபாத்திர வடிவமைப்பு இதில் வரும் நிலவறை மனிதனையும், தஸ்தயெவ்ஸ்கி எழுதிய 'குற்றமும் தண்டனையும்' நாவலின் கதாபாத்திரம் ரஸ்கோல்னிக்கோவையும் கலந்தது போல் இருக்கும்.


இந்த நாவலின் முதல் பகுதியில் நான் குறிப்பு எடுத்துக்கொண்டே இருந்தேன். ஒருகட்டத்தில் நான் குறிப்பு எடுப்பதை நிறுத்தினேன். ஏனென்றால் நான் முதல் பகுதியில் முக்கால்வாசி பக்கங்களைக் குறிப்பு எடுத்துக்கொண்டே இருந்தேன்.


தான் யார் என்று நிலவறை மனிதனின் கேள்விக்கு யாரிடமும் கண்டிப்பாகப் பதிலே இல்லை.


என் அறிவுக்கு எட்டிய வரை, மனிதர்களுக்கு நன்மை தருபவை என்று மதிப்பீடு செய்யப்பட்டிருக்கும் முழுப்பட்டியலுமே புள்ளிவிவரங்களின் சராசரிகளிலிருந்தும் பொருளாதாரச் சூத்திரங்களிலிருந்தும் மட்டுமே தயார் செய்யப்பட்டிருப்பவை. மனிதர்களுக்கு நலமளிப்பவை என்று நீங்கள் சொல்லும் பட்டியலில் சமாதானம், சுதந்திரம், வளமை, செல்வச்செழிப்பு இன்னும் இவை போன்றவை மட்டுமே இருக்கும். இவற்றையெல்லாம் நன்றாகத் தெரிந்துவைத்துக்கொண்டே வேண்டுமென்றே ஒரு மனிதன் இந்தப் பட்டியலில் உள்ள எல்லாவற்றையும் மீறிச் செல்ல முயல்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது உங்கள் பார்வையில், ஏன் என் பார்வையிலும் கூடத்தான் அவனை ஒரு குழப்பவாதி, பைத்தியம் என்றுதானே சொல்வோம்? அப்படித்தானே?


60 views0 comments

Recent Posts

See All

Commenti


This image has three writers Camus, Dostoevsky & Kafka with a quote
bottom of page