அறிவுள்ள சூர்யா… அறிவு கெட்ட சூர்யா -ஜாப்ளான் (நாவலிலிருந்து)
இருத்தலியல் கொள்கை முதன்மையாக வைத்து தமிழில் ஏதேனும் நாவல் வெளி வந்திருக்கிறதா என்று அலசும்போது, அனைத்து நாவலும் இருத்தலியல் கொள்கை கொண்டவை தான் என்று புலப்பட்டது. இந்த புரிதல் முன்னே வாங்கிய புத்தகம் தான் சாரு நிவேதிதா எழுதிய 'எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்' (Existentialismum Fancy Baniyanum) புத்தகம். தமிழில் இருத்தலியல் பற்றி தலைப்பு கொண்ட புத்தகமா? வாங்கி படித்துவிடுவோம் என்று வாங்கினேன்.
இந்த நாவல் கதையின் முக்கியமான கதாபாத்திரமான சூர்யாவுக்கும் அவனுடைய நண்பன் பாலாவுக்கும் இடையே ஏற்படும் கடித போக்குவரத்து மோதல் மூலம் இக்கதை விரிகிறது. பாலா மார்க்சிய வாதி, சூர்யா எக்ஸிஸ்டென்ஷியலிஸ்ட், ஒருவரை ஒருவர் அவர் கொள்கைகளைச் சாடிக் கொள்கிறார்கள்.
பின் சூர்யா அவனுடைய அப்பா வழி சொந்தங்களைப் பற்றி விவரிக்கிறான். ஆனால் அது அவன் விவரணை இல்லாமல் அதை ஒரு நாவலாக எழுத முற்பட்டு, அதைப் பலமுறை மாற்றி நீக்கி எழுதி, கடைசியில் எரித்து விடுகிறான். எரிந்த பகுதிகளை க்ளிங்கோவிட்ஸ் என்பவன் நினைவில் கொண்டதைத் தொகுத்து வழங்குகிறான். பிறகு சூர்யாவின் அம்மா வழி பற்றி ஆரம்பித்து அவன் பால்யம் முதல் சுற்றோர் வரை க்ளிங்கோவிட்ஸ் விவரிக்கிறான்.
இந்த நாவல் ஒரு Transgressive Fiction. அதாவது வரம்புகள் மீறிப் புனையப்பட்ட நாவல் . சமூக கட்டமைப்பில் பேசக் கூடாது என்று அமுக்கி வைத்துள்ளதைப் பேசுவது அதன் வகை. சாரு நிவேதிதா ஒரு Transgressive எழுத்தாளர் என்று கேள்விப்பட்டது உண்டு ஆனால் வாசித்ததில்லை. நான் வாசித்த அவருடைய முதல் புத்தகம் இதுதான். அவர் எழுதிய முதல் புத்தகமும் இதுதான்.
பதின் பருவத்தில் ஏற்படும் பாலுறவு சம்பந்தமான சிக்கல்கள் பற்றி நகைச்சுவையாகப் பதிவு செய்கிறார். கோயிலில் உள்ள சாமி சிலையில் சிறுநீர் கழிப்பதாக ஓர் இடத்தில் வருகிறது. இதை ஆர்.எஸ்.எஸ் ஆட்கள் படித்தால் கோவத்தின் உச்சத்துக்குச் செல்லலாம், ஆனால் அவர்களைப் பற்றியும் ஓர் இடத்தில் நொறுக்குகிறார்.
ஆர்.எஸ்.எஸ் கிளை ஒன்று நாணயக்காரத் தெருவில் தொடங்கப்பட்டது. வேலையின்றி திரிந்து கொண்டிருந்த விடலைகளுக்கு பொழுதுபோக்காக இருந்தது இந்தச் சங்கம்.
நாவில் பல உரையாடல்கள் அதிர்ச்சியடையச் செய்யும், உதாரணமாக சூர்யா கிரணிடம் பேசும்போது,
சூர்யா : உனக்கு பயமாயில்லையா, யாரென்று தெரியாத என்னுடன் வருகிறாயே?
கிரண் : உன்னால் என்னை என்ன செய்ய முடியும், மிஞ்சிப்போனா என்னை கற்பழிக்கலாம், அதை நான் எதிர்க்க மாட்டேன். I would rather enjoy it.
சூர்யாவுடன் சேர்த்து நானும் அதிர்ந்து போனேன். கிரண் சொல்வது இயல்பானது அல்ல, இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்கள் சமுதாயத்தில் பார்ப்பது அரிது. நம் கண்களுக்கு அவர்கள் புலப்படாமல் இருக்கிறார்கள். யார் எப்படி உருமாறுவார்கள் என்று நம்மால் உறுதியோடு சொல்ல முடியாது. நாவலிலும் அதுவே நடக்கிறது.
நாவலில் அவ்வளவு கதாபாத்திரங்கள் ரஷ்ய, கொலம்பிய புதினங்களில் வருவது போல் அத்தனை கதாபாத்திரங்கள். நினைவில் வைத்துக்கொள்வது அவ்வளவு கடினமாக இருந்தது. தலை கிறுகிறு என்று சுற்றும். ஒரே அமர்வில் வாசித்ததால் தப்பித்தேன்.
கதை எதை நோக்கிச் செல்கிறது என்று புரியவே புரியாது. ஏனென்றால் கதை என்று சாரு நிவேதிதா நாம் உற்று நோக்க அங்கு எதுவும் முழுமையாகத் தரவில்லை. நாமும் அது போக்கில் போக வேண்டியதுதான். சூர்யாவின் அனுபவங்களும், அவனைச் சுற்றி நடந்தவை மட்டும் இருக்கிறது. அந்த அனுபவங்கள் நகைச்சுவையாகவும், ஆர்வம்கொள்ளவும் செய்கிறது. என்ன சொல்ல வருகிறார் என்று உணரவே முடியாது. தொட்டுத் தொட்டு அதன் இஷ்டத்துக்குக் கதை நகரும், ஓர் நாவலின் கட்டமைப்பில் கூட இந்நாவல் அடங்காது. அந்த வகையில் வரம்பு மீறிப் புனையப்பட்ட நாவலின் இயல்புகளைப் பூர்த்தி செய்கிறது.
புத்தகத்தில் கூறியிருப்பது போல் இந்த நாவலில் எந்தவொரு இடத்திலும் மதிப்பீட்டு அளவிலான தீர்ப்பை முன்வைக்கும் வார்த்தைகளோ பார்வையோ இல்லை. நமது பார்வையிலேயே ஒட்டுமொத்த கதையும் விடப்பட்டு இருக்கிறது. உண்மையில் அதுவொரு சிறப்பான அம்சமும், அயர்ச்சி தரும் அம்சமும்கூட. ஏனென்றால் மனிதர்களுக்குத் தேர்ந்தெடுப்பது என்பது தலைவலியான வேலை. இறுதிவரை சரியாகத் தேர்ந்தெடுக்க முடியாது.
நான் உனக்குக் கதாபாத்திரங்களைத் தந்துவிட்டேன், நீயே முடிவு செய்து கொள்ளலாம் என்று நினைக்கலாம், ஆனால் அதை உன்னால் செய்ய முடியாது என்று சாரு நிவேதிதா சவால் விடுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. அந்த உணர்வைத் தான் இந்த நாவல் கடத்துகிறது. இந்நாவலை வாசிப்பவர்கள் அனுபவம் வைத்தே இந்நாவல் வெவ்வேறாகப் புரிந்து கொள்ளப்படும்.
சில அம்சங்கள் எனக்கு இன்னும் புலப்படாததே இப்புத்தகத்தை மீள் வாசிப்பு செய்யத் தூண்டுகிறது. அதனால் பிடித்திருக்கிறது, ஆனால் புரியவில்லை.
Comments