இப்புத்தாண்டு பாலு எழுதிய 'துயரங்கள் விற்பனைக்கல்ல' புத்தக்த்தோடு தொடங்கியது. மொத்தம் பதினான்கு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு, இதில் எது பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை என்று அறுதியிட்டு கூற முடியாது. என்னை பொறுத்தவரை புரிந்தது, புரியாதது மட்டும்தான். அதற்கு முன் பாலுவுக்கு வாழ்த்துகள் மூன்று வருடங்களில் இது இரண்டாவது புத்தகம், சிறுகதை தொகுத்துக் கொண்டு இருக்கிறேன் பார்ப்போம் என்று கடந்த வருடத்தில் கூறினான், இதோ சரியாக வெளியிட்டுள்ளான்.
புரியாதது அதனால் எனக்கு பிடிக்கவில்லை, அது ‘உடுத்துவதொன்றை’ , ‘மனைவியால் கைவிடப்பட்டவன்’ மட்டும்தான். இந்த இரண்டு கதைகளும் முழுமை பெறாமல் இருந்தது போல் தோன்றியது. மீதி கதையை அச்சிட வில்லையா என்று தோன்றியது. மீள் வாசிப்பின் போது அதனுடைய அம்சம் என்னவென்பது புரிந்துகொண்டேன், ஆனால் அப்போதும் அந்த முழுமை இல்லை என என் மனம் தங்கிவிட்டது.
புரிந்ததால் பிடித்துப்போன கதைகள். ‘உயிர்த்தெழுதல்’ என்னை மிகவும் ஈர்த்தது. அக்கதையின் இறுதி வரிகள் ஒட்டுமொத்த கதையை மீள் வாசிப்பு செய்ய தூண்டியது. கதையில் ஓர் எழுத்தாளர் ஓர் புத்தகத்தை கையில் சுமந்துகொண்டே கண்ணீர் சிந்திக்கொண்டு செல்கிறார். இலக்கிய வாசிப்பு உள்ளவர்கள் அதை நன்றாக உணர முடியும். அந்த எழுத்தாளர் அப்போது உயிர்த்தெழுந்து கொண்டிருந்தார்.
‘D மைனரும் C மேஜரும்’ கதையில் மீண்டும் என்ன அதன் முடிவு ஈர்த்தது. பொதுவாக சிறுகதைகளில் கதையின் இறுதியில்தான் அக்கதை எதை பற்றியது என்றோ, அல்லது அக்கதையின் ஒட்டுமொத்த முகத்தையே மாற்றிபோடுவதாக அமையும். சிறுகதைக்கன அமைப்பு என்று நான் கருதும் அந்த அளவை பாலு கச்சிதமாக பூர்த்தி செய்துள்ளான்.
D மைனரும் C மேஜரும் கதையின் இறுதியில் நான் சத்தமாக சிரித்து விட்டேன். வாசிப்பவர்கள் கூர்ந்து வாசித்தால் அவசியம் சிரிக்கலாம். அந்த முடிவு அப்படிதான் இருந்தது. இதேபோல் மீண்டும் என்னை சிரிக்க வைத்தது ‘துயரங்கள் விற்பனைக்கல்ல’ சிறுகதையில்தான். அது சிலர் வாய் வார்த்தையாக எதையும் கூறலாம் ஆனால் யதார்த்தத்தில் அதை செயல்படுத்தும்போது அமைதி இழக்கவே செய்கிறார்கள் என்று எடுத்துரைக்கிறது. போலியான Pragmatic or Practical ஆட்களை நையாண்டி செய்வதுபோல் எனக்குப்பட்டது.
‘உறவுகள் தொடர்கதை’ கவிபோன்று இருந்தது. பாலு திட்டமிட்டே இறுதி வரிகளை பூர்த்தி செய்யவில்லை. அது நம்மை பூர்த்தி செய்ய தூண்டுகிறது. ஒரு சிறுகதையின் வேலை அடுத்து என்ன நடந்திருக்கும் என்று தூண்ட வைப்பதுதான். அந்த வகையில் இந்த கதை என்னை வெற்றிக்கொண்டது.
‘ஃபோர் ஃபோர்ஸ் ஆர்’ கதை கொடூரமானது. அவன் அந்த சத்தத்திலிருந்து தப்பிக்க எப்படி கழிவறையில் உட்கார்ந்து அந்த கெட்ட துர்நாற்றத்தை சமாளித்துக்கொண்டு உணவு உண்டான் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. குடும்ப உறவுகளில் ஏற்படும் பிரச்சினை எப்படி குழந்தைகள் மீதான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று வெளிச்சம் போட்டுகாட்டியது.
‘பட்டாம்பூச்சியை போல’ சிறுகதையில் Dominant Relationship அல்லது துணைக்காக ஒருவன் முழுமையாக தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும்போது அதனால் ஏற்படும் விளைவால் எப்படி Metamorphosis அல்லது எப்படி உருமாற்றம் அடைக்கிறான் என்பதே கதை.
‘அன்பின் பாலே’ காதலை மட்டும் இல்லாமலும், அனைத்தையும் கண்டிப்பாக பொறுமையாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று சொல்கிறது. தினம் ஒருவருடன் பேசிக்கொண்டே இருந்தால் இறுதியில் வெறுப்பில்தான் முடியும், அதை பலர் உணர்வதில்லை, வார்த்தைகள் இல்லாமல் பல உறவுகள் இதனை புரிந்து கொள்ளாமல் முறிந்துவிடுகின்றன. இந்த கதைக்கான பதிலாக இதே தொகுப்பில் ஒரு கதையில் இருப்பதாக இருந்தது, அது 'உவமானம்' சிறுகதை, ஆனால் இல்லை அதுவும் சலிப்பு கொண்டவன் மாற்றமடைந்து கொண்டே இருந்தாலும் இறுதியில் சலிப்பு தான் இறுதி நிலை என்று எடுத்துரைக்கிறது.
‘மெய்யுறவு’ தென்னழகனை நினைவுப்படுத்தியது. சென்னை திரிசூலம் பக்கத்தில் உள்ள மலைக்கு செல்ல வேண்டும் என்று மின்சார ரயிலில் பயணம் செய்யும்போது கூறினான். இன்றுவரை நான் ரயிலில் செல்லும்போது, தென்னழகன் அங்கேதான் சென்றிருப்பான் என்று நினைத்துக்கொள்வேன். மெய்யுறவு கதையை அவனிடம் சென்று தந்து சந்தித்து விட்டு வர வேண்டும்.
‘மெளனம் ஒரு வன்முறை’ , ‘விமர்சகன்’ நான் ஏற்கனவே வாசித்தவை. விமர்சகன் புதிய முயற்சி, ஆன்டன் செகாவுக்கு பாலுவின் அருமையான சமர்ப்பணம். மெளனம் ஒரு வன்முறை என் பள்ளி காலத்தை மீண்டும் நினைவுபடுத்தியது. The Hunt பார்த்துவிட்டு பாலு பகிர்ந்தவைதான் இந்த கதை.
‘நிலவொளி சொனாட்டா’ மீள் வாசிப்பு செய்ய வேண்டும். இக்கதையில் பிரச்சினை என்று நான் நினைப்பது ஒன்றுதான், அது உரையாடல்களின் பேச்சு வழக்கு, கதை நிகழ்காலத்தில்தான் நடக்கிறது, ஆனால் சில இடங்களில் கதாபாத்திரங்கள் தூய தமிழில் பேசுவதால், அது வாசிக்கும் வேகத்தை மட்டுப்படுத்துகிறது.
இத்தொகுப்பில் முழுமையாக பிரச்சினை என்று நான் கருதுவது ஒன்றுதான், கதைகள் அனைத்தும் பாலுவை சுற்றி நடந்தவையாக இருப்பதால் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, பாலுவை தெரியாதவருக்கு எப்படி சரியாக புரிந்துகொள்வார்கள் என்று தெரியவில்லை. அந்தளவுக்கு மிகவும் பெர்சனலாக இருந்தது.
இவையனைத்தும் வைத்து ஒரு முடிவுக்கு வர வேண்டாம், வாசியுங்கள். ஏனென்றால்,
‘A book read by a thousand different people is a thousand different books’
வாழ்த்துகள் பாலு!
Comments