இந்த நாவலை எனது பதினாறு வயதில் வாசித்தபோது என்ன புரிந்துகொண்டேன் என்று தெரியவில்லை, ஆனால் என்னுள் எதோ செய்தது. அது எனக்கு ஒரு பைபிள். வாழ்க்கையில் படிக்க வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று. - இயக்குனர் மிஷ்கின்.
அப்படிக் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகமா என்று கேட்டால் இருக்கலாம் ஆனால் எனக்கு அவ்வாறு தோன்றவில்லை.
1899-ஆம் ஆண்டு வெளியான லியோ டால்ஸ்டாயின் கடைசி நாவலான புத்துயிர்ப்பு (Resurrection), மாஸ்லவா என்ற இளம்பெண் பாலியல் தொழில் செய்து வருபவள், அவள் நஞ்சு வைத்து ஒருவரைக் கொன்றதற்காக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதில் கதை தொடங்குகிறது. அங்கு நீதிமன்றத்தில் சான்றயராக (Jury) நெஹ்லூதவ் என்பவன் கலந்து கொள்கிறான். அவளை பத்து வருடங்களுக்கு முன் மயக்கிக் கெடுத்துக் கைவிட்டவன். அவன் மாஸ்லவாவை அடையாளம் கண்டு கொள்கிறான். அவளின் இந்த இழி நிலைக்கு தான்தான் காரணம் என்று நினைத்து வருந்துகிறான். அவளுக்கு சைபீரியக் கடின உழைப்பு தண்டனை என தீர்ப்பளிக்கப்படுகிறது. அவளிடம் மன்னிப்பு கேட்கிறான், அவளை மன்னிக்க வேண்டுகிறான், அவளை மணந்து கொண்டு, அவளை அந்த துன்பத்திலிருந்து மீட்க முயல்கிறான். அவளைப் பின்தொடர்ந்து சைபீரியாவுக்கு செல்கிறான். அவள் மன்னித்தாளா? நெஹ்லூதவ் அதன் மூலம் உயிர்த்தெழுந்தானா, புத்துயிர்ப்பு பெற்றானா என்பதே மீதி கதை. இந்த கதை பற்றி இப்படிதான் எனக்கு அறிமுகமானது. ஆனால் இந்த கதை இவ்வாறு இல்லை.
மாஸ்லாவிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்பது முதன்மையாக இருக்கும்போது, இதை டால்ஸ்டாய் இரண்டாம் பாத்திரத்தின் கதை போல் மாற்றிவிட்டார். இந்த புத்தகம் மூன்று பாகம் கொண்டது. முதற்பாகம் மாஸ்லவா, நெஹ்லூதவ், நீதிமன்றம் என்று வரும். அடுத்து வரும் இரண்டு பாகமும் அதுவும் முக்கியமாக இரண்டாவது பாகம் எதற்காக டால்ஸ்டாய் அமைத்துள்ளார் என்றே புரியவில்லை. நெஹ்லூதவ் ஒரு நிலப்பிரபு, அவன் தன் நிலங்களை விவசாயிகளிடம் தருவதைப் பற்றிய முழுவதும் இருக்கிறது. இது முதன்மையான கதையாக மாறுகிறது. அதை டால்ஸ்டாய் நிலவுடைமை பார்வை எனத் தனி புத்தகமாக வெளியிட்டு இருக்கலாம். அது சுவாரஸ்யமாக இருந்தாலும் கதைக்கு கிஞ்சிற்றும் ஒட்டவில்லை. மாஸ்லாவிடம் புத்துயிர்ப்பு பெறச் செல்ல வேண்டிய நெஹ்லூதவை டால்ஸ்டாய் வலுக்கட்டாயமாக அவனுக்கு நிலவுடைமைதான் முக்கியம் என்பதுபோல் அமைத்துள்ளார். அது இயல்பாக இல்லாமல் செயற்கையாக இருந்தது.
இரண்டாம் பாகத்திலும் கொஞ்சமும் மூன்றாம் பாகத்திலும் நெஹ்லூதவ் நீதிமன்றங்கள், சட்டங்கள் பற்றி தனது விமர்சனங்களை எடுத்துரைக்கிறான். இவைதான் மாஸ்லவாவின் கதையோடு ஒன்றி வருபவை. ஆனால் இதை விரிவாக டால்ஸ்டாய் அமைக்கவும் இல்லை, இவை சமூக வர்ணனையாகவும் (Social Commentary) இருக்கிறது. மனிதன் கவனம் சிதறி தான் செய்து கொண்டு இருக்கும் காரியத்திலிருந்து விலகுவதுண்டு, ஆனால் இப்படி ஐந்நூறு பக்கங்களுக்குத் திசை மாற முடியும் என்று தெரியாமல் போய்விட்டது.
இதில் வரும் சமூக வர்ணனையானது எனக்கு தஸ்தவெஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலை நினைவுபடுத்தியது. அதில் வரும் ரஸ்கோல்னிகோவ் குற்றம் புரிந்தவன். அவன் குற்றத்தையும் தண்டனையும் பற்றி பேசுவது சிந்திப்பது கதையோடு ஒன்றியிருந்தது. ஆனால் இதில் நெஹ்லூதவ் பேசுவது அந்தளவு ஒட்டவில்லை.
எனக்கு இதில் பிடித்த கதாபாத்திர அமைப்பு செலேனின் என்பவன்தான். நெஹ்லூதவ் நண்பனான இவன், எவ்வாறு புரட்சிகர மாணவணாக இருந்ததிலிருந்து எப்படி செயற்கையான சமயப் பற்று கொண்டு துன்பத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான் என்பதைப் பற்றியது. ஆன்மிக நெருக்கடி ரீதியாக மிக சுவாரஸ்யமான கதாபாத்திர அமைப்பு.
இறுதியில் நெஹ்லூதவுக்கு நடைபெறுவதெல்லாம் அவ்வளவுதானா என்று அவனுக்குத் தோன்றியதுபோல்தான் எனக்கும் தோன்றியது. அதைத்தான் கடத்த டால்ஸ்டாய் முயன்றிருக்கிறார், ஆனால் எனக்குக் கதை அவ்வளவுதானா என்றே தோன்றியது. கதை முழுமை பெறாமலே முடிந்ததாக எனக்குப்பட்டது.
டால்ஸ்டாய் சிறுகதைகள் பலவற்றைக் கடந்த வருடம் வைத்துப் படித்து முடித்த போது, ஒரு புனித நீராடல் செய்ததது போன்று தோன்றியது, அவற்றை அப்படிதான் டால்ஸ்டாய் படைத்திருப்பார். ஆனால் இதில் அதை எதிர்பார்க்க முடியாது.
நாவலைத் தொடங்குவதற்கு முன் சில பைபிள் வரிகளை டால்ஸ்டாய் எழுதித் தொடங்குகிறார். அதில்,
அப்பொழுது பேதுரு அவரிடம் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றம் செய்து வந்தால், நான் எத்தனை தரம் மன்னிக்க வேண்டும்? ஏழு தரமோ? என்று கேட்டான். அதற்கு இயேசு: ஏழு தரம் மாத்திரம் அல்ல, ஏழெழுபது தரம் என்று உனக்குச் சொல்கிறேன், என்றார். மத்தேயு, 18: 21-22
இயேசு சொல்வது போல் ஒருவேளை எழெழுபது தரம் வாசித்தால் நாமும் புத்துயிர்ப்பு அடையலாம் போலும்.
Comments