To read this article in English - (click here)
இரண்டு வருடம் முன்பு இந்நேரத்தில் ஒரு காதல் தோல்வி பாடல் ட்ரெண்டிங்கில் இருந்தது, அது ஒரு காமெடி நடிகரின் படத்திலிருந்து வெளியான பாட்டு. எங்குப் பார்த்தாலும் அதுதான் ஓடிக்கொண்டு இருந்தது.
எனக்குத் தெரிந்த நண்பன் ஒருவன் அந்த பாடலை மிகவும் அணு அணுவாக ரசித்தான். ஸ்டேட்ஸ் வைத்தான், ஷேர் செய்தான். வர்ணித்தான். என்ன காரணம் என்று என்னால் சிந்திக்க முடியவில்லை. அந்த பாட்டு அவ்வளவு சிறந்த பாடல் எல்லாம் இல்லை. வெளியாகும் அந்நேரத்திற்கு டிரெண்ட் அடிக்கும் வகையறா தான். இன்று அந்த பாடல் காணாமல் போய்விட்டது. எனக்கு அந்த பாடல் அப்போது பிடித்திருந்ததுதான் பொய் சொல்ல மாட்டேன்.
இவன் இவ்வாறெல்லாம் செய்ய மாட்டேனே என்று அதைக் கடந்து போய்விட்டேன். சில நாட்களில் நண்பர்களாகச் சேர்ந்து சந்திக்கலாம் என்று திட்டமிட்டுச் சந்தித்தோம். அவனும் வந்திருந்தான். மற்ற விடயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கும்போது அவனாக தனக்கு பிரேக் அப் ஆனதாகக் கூறினான். இருவரும் சுமுகமான முறையில் பிரிந்ததாகக் கூறினான். அதுதான் நல்லது. எனக்கு அப்போது புரிந்தது அவன் ஏன் அந்த பாடலை வர்ணித்தான் என்று, இது ஒன்றும் ஆச்சரியம் இல்லை, அதை ஸ்டேட்ஸாக வைத்ததுமே அனைவரும் புரிந்து கொள்ளலாம். ஆனால் உறுதியாகத் தெரியாது வரை நாம் எதையும் நம்ப முடியாது.
பின் பல நாட்கள் அவனைப் பார்க்கவில்லை. ஆனால் ஸ்டேட்ஸ் மூலமாக அவன் பேச்செல்லாம் சற்றே மாறியது. அவன் காதல் தோல்விக்கு முன்பு வைத்த கருத்துக்களும், பின் வைத்த கருத்துக்களும் முற்றிலும் வேறுபட்ட விதத்தை நான் கவனித்தேன்.
அவன் ஒருபடி மேலே சென்று பெண்கள் அனைவரும் தீயவர்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்கினான். அவர்கள் அடக்கமாகத்தான் நடந்துகொள்ள வேண்டும் என்று இன்னொரு நண்பனிடம் கூறியுள்ளான், அதை என்னிடம் பகிர்ந்த போது, பாவமாக இருந்தது. ஏன் இவ்வாறு முட்டாள்தனமாக மாறிப்போய்விட்டான் என்று தெரியவில்லை. தான் என்ன தவறு செய்தோம் என்று சிந்தித்து அதைச் சரிசெய்ய முயலவில்லை. அவன் தவறு செய்யவில்லை என்றால் அடுத்தமுறை உறவில் கவனமாக இருந்தாலே போதுமானது. ஆனால் அவனோ தன்னை மாற்றிக்கொள்ளாமல், தற்போது இருக்கும் குணாதிசயங்களுக்கு உதவும் விடயங்களை அவன் தன்னோடு சேர்த்துக் கொண்டான். இது இயற்கைக்கு எதிரானது. ஏனென்றால் இயற்கை மாறுதலுக்கு உட்பட்டது.
ஒரு தனிப்பட்ட நபரோடு நடந்த கசப்பான அனுபவத்தை வைத்து மனிதர்கள் அனைவரும் இவ்வாறு தான் நடந்து கொள்வார்கள் என்று என்னுதல் பைத்தியக்காரத்தனம். மனிதர்களின் குணாதிசயங்கள் கருப்பு வெள்ளை என்று இருவகை மட்டும் கிடையாது. அவை எண்ணில் அடங்காதது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் இருக்கிறோம், அதுதான் இயற்கையின் சிறப்பு, பார்க்க ஒத்த தோற்றத்தில் இருக்கலாம் ஆனால் அவை சிறு சிறு மாறுதல்கள் கொண்டிருக்கும்.
(உனக்கு நடந்தால்தான் அந்த வலி தெரியும் என்று கூறலாம், அந்த மாதிரியான தோல்வியெல்லாம் எனக்கும் நடந்திருக்கிறது, அதற்காக இவ்வாறு முட்டாள்தனமாக மாறவில்லை, சரியென்று என் பக்கம் இருந்த தவறுகளைத் திருத்திக்கொண்டு வேறு வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டேன்)
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவனுடைய முட்டாள்தனம் முற்றிப் போனது. இதை இவனிடம் கண்டிப்பாகச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் திடீரென்று எனக்கு ஒன்று நினைவுக்கு வந்தது.
நான் யார் அவனைக் கண்டிக்க? நான் யார் அவனுக்குப் புத்தி கூற? நான் யார் அவனைத் திருத்த? எனக்குத்தான் அந்த அதிகாரம் உண்டா? யாருக்கு அதிகாரம் இருக்கிறது அவனைத் திருத்த, புத்திமதி சொல்ல?
கடந்த சில வருடங்களாக மனிதன் உருவாக்கிய கோட்பாடுகளில் நம்பிக்கை அல்லாதவனாக என்னை வளர்த்துக்கொண்டேன். அதன் விளைவு மனிதர்கள் கொண்டிருக்கும் ஒழுக்க நெறிகள், சட்டங்கள் அனைத்தும் சுக்குநூறாக போனது. இருந்த கொஞ்ச நஞ்சும் சென்ற ஆண்டு முடிவில் முற்றிலும் சிதைந்தது. இப்படி இருப்பவன் எவ்வாறு இன்னொருவனைக் கண்டிக்க முடியும்? அந்த நண்பன் எந்த கோட்பாடு, கட்டமைப்பு தன்னை திருத்தும் என்று நினைக்கிறானோ, அவை தான் அவனைக் கண்டிக்க முடியும். ஆனால் உண்மையில் அவ்வாறான கோட்பாடு, கட்டமைப்பு உண்மையில் உண்டா? என்னைக் கேட்டால் இல்லை என்பேன். அப்படி ஒன்று இருந்து, அதை அவன் நம்பினாலும், அவை நம்பும் வரைதான் அந்த கற்பனையான கோட்பாடு கட்டமைப்பு நிலைக்கும். அவன் அதன் மீது தனது நம்பிக்கையை நிறுத்திக்கொண்டதும், அது மறைந்து போகும். ஏனென்றால் மனிதன் உருவாக்கியுள்ள கோட்பாடும் கட்டமைப்புகளும் இயற்கையில் இல்லை. அனைத்தும் கற்பனைதான்.
ஆனால் அந்த நண்பனைப்போன்று முட்டாள்தனமாகப் பேசுபவர்களை காணும்போது, இவர்களை திருத்தும் பொருட்டு அந்த கோட்பாடுகளும் கட்டமைப்புகளும் உண்மையாக இருந்தால் தேவலாம் என்றே தோன்றுகிறது.
என்னை அந்த நண்பனிடம் நெருங்க விடாமல், சிந்திக்க வைத்தது தஸ்தவெஸ்கி தான்.
அவர் எழுதிய நிலவறை குறிப்புகள் நாவலில் இப்படியொரு பத்தி வருகிறது:
நம்மில் எவருக்காவது சற்று சுதந்திரம் தந்து அவரைப் பிணைத்திருக்கும் தளைகளிலிருந்து அவரை விடுவித்து அவரது செயல் பாடுகளை விரிவுபடுத்தி; ஒழுக்க அளவுகோல்களைக் கொஞ்சம் தளர்த்திவிட்டால் போதும். நான் நிச்சயமாகச் சொல்கிறேன், நாம் உடனேயே நம்மீது கட்டுப்பாடுகள் வேண்டும் என்று இறைஞ்சத் தொடங்கிவிடுவோம்.
நானும் அவ்வாறுதான் இறைஞ்சுகிறேன். கோட்பாடுகளும் கட்டமைப்புகளும் உண்மையாக இருக்கக் கூடாதா?
Comments