செப்டம்பர் 3, 2021
நான்கு பேர் அடித்துப் போட்டது போல் காய்ச்சல் இருந்தது, எனது அறையில் இரண்டு மூன்று போர்வைக்குள் படுத்துக் கிடந்தேன். என்னை என் அண்ணன் கொரோனா சோதனை செய்ய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். எனக்கும் கோவிட் வந்துவிட்டது எனப் பயந்து போனேன்.
உள்ளே சென்றதும், அங்கிருந்த டாக்டர் எனக்கு இருந்த அறிகுறிகள் பற்றிக் கேட்டறிந்தார். பின் என்னுடைய இரத்த அழுத்தம் எவ்வளவு இருந்தது எனச் சோதனை செய்தார். சோதனை செய்துகொண்டே என்னைப் பார்த்தவர்,
"ஏன் பயப்படுறீங்க? உங்க வயசு என்ன?"
"இருபத்தி இரண்டு" என்று சொன்னதும், எனது எடை பற்றிக் கேட்டார். நான் 117 என்று சொன்னேன்.
"உங்க வயசுக்கு இவ்வளவு இருக்கக் கூடாது தெரியுமா? உங்களுக்கு ப்ரெஷர் 180-120 காட்டுது". அண்ணண் நான் பயப்படுவதாக கூறினான். நானும் பயம் என்றேன்.
"இல்ல நீங்க பயப்படுறீங்க புரிது, ஆனா உடம்ப குறைக்கனும், நான் Nutritionist recommend பண்றேன், ஆறு நாள் டெய்லி வாங்க, உங்களுக்கு ப்ரெஷர் கண்டிப்பா செக் பண்ணனும், இப்படியே விட்டா உங்க ஹார்ட் வெடிச்" என்றவர் தன்னை அடக்கிக் கொண்டு அப்பறம் அவ்வளவுதான் என்று செய்கையாகச் செய்துவிட்டுச் சென்றுவிட்டார். அதனால் எனக்குப் பயம் இன்னும் கூடத்தான் செய்தது.
False Positive வரும் என்பதால் எனக்கு Glucose மட்டும் ஏற்றிவிட்டு அனுப்பிவிட்டார்கள். அப்போதைக்குக் காய்ச்சல் குறைந்தது.
செப்டம்பர் 4, 2021
நேற்றைக்கு இருந்ததை விட எனக்குக் காய்ச்சல் அதிகமானது, எனக்கு கொரோனாவாக இருந்தால் வீட்டில் அப்பா அம்மாவுக்கு வராமல் இருக்க அண்ணன் என்னை என் அறையில் தனிமையில் விட்டான், தூக்கமும் வராமல் விட்டத்தை பார்த்தபடி படுத்த கிடந்தேன். அன்று என் இன்னொரு அண்ணன் அவருடைய கல்யாணத்துக்குப் பத்திரிக்கை வைக்க வந்திருந்தார். அவர்களோடு பேசக்கூட முடியாமல் நான் படுத்துக் கிடந்தேன்.
நடுவில் அண்ணன் எனக்கு உணவளிக்க வந்தபோது, என்னால் சாப்பிட முடியவில்லை, வலியும் பொறுக்காமல் உடைந்த அழுத் தொடங்கினேன்.
"என்னால முடியல!"
என் அண்ணன் கதவைச் சாத்திவிட்டு, "நீ அழுறத பார்த்தா அம்மாவும் அப்பாவும் தைரியமாக இருக்க மாட்டாங்கடா, அழாதா, சரி ஆயிடும்" என்றான். கண்ணீரை அடக்கிக்கொண்டு மீண்டும் படுத்தேன். என்னால் உடனே எழுந்திருக்க முடியவில்லை. ஏன் என்னால் முடியவில்லை என்று மிகவும் வருத்தப்பட்டேன். அடுத்த நாளே எனக்கு கொரோனா இல்லை என்று அறிக்கை வந்தது. ஆனால் அன்றுதான் நான் ஒருவேளை முடிவு செய்திருப்பேனோ என்னவோ. நான் உடல் எடையை குறைப்பதை விட, என் உடலை நல்ல நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று.
எனக்கு நினைவு தெரிந்து எனது இரண்டாவது வகுப்பிற்குப் பிறகு என் வாழ்க்கையில் நான் ஒருபோதும் மெலிதாக இருந்தது இல்லை. நான் ஆடைகள் வாங்கக் கடைக்குச் சென்றால் என்னுடைய உடல் அளவுக்கு ஏற்ற மாதிரி எதுவும் இருக்காது. Readymade ஆடைகளை என்னால் போட்டு பார்க்கவே முடியாது. சில கடைகளில் மட்டும் இருக்கும் ஆனால் வித விதமாக இருக்காது, ஒன்று இரண்டு டிசைன் தான் இருக்கும். நான் எனது பதின் பருவத்தை முழுவதும் உடல் எடை குறைப்பதற்காகப் பல வழிகளை முயன்று செலவிட்டேன். ஒரே ஒருமுறையைத் தவிர வேறு எதுவும் எப்போதும் எனக்கு பயனளிக்கவில்லை.
2018 ஆம் ஆண்டு என் வீட்டில் நான் 115 கிலோவிலிருந்து 105 வந்தால் கம்ப்யூட்டர் வாங்கி தருவதாகச் சொன்னார், அப்போது சுடு தண்ணீர் குடித்து, காலை மாலை என வெறிபிடித்தவன் போல் நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் நடந்து, ஒன்பது கிலோ குறைத்தேன். ஒரு கிலோ தான் இடைவெளி என்று நான் என் வீட்டை ஏமாற்றி கம்ப்யூட்டர் வாங்கிக் கொண்டேன். அத்தோடு முடிந்தது.
அதன் பின் கல்லூரி முடிந்து வீட்டிலேயே உட்கார்ந்து உட்கார்ந்து எனது எடை 117 சென்றது. நானும் குறைக்க வேண்டும் என நினைப்பேன் ஆனால் குறைக்க மாட்டேன். வீட்டில் அப்பாவின் அம்மாவின் கவலை அதுவாகத்தான் இருக்கும், அவர்களும் சொல்லிப் பார்ப்பார்கள், நான் எதுவும் செய்யாமல் வாரம் வாரம் ஞாயிற்றுக்கிழமையில் ஒரு அரை தந்தூரி சிக்கனும், Schezwan சிக்கன் நூடுல்ஸூம் உண்பேன், தனி ஆளாக.
உங்க ஹார்ட் வெடிச்சுரும், வெடிச்சுரும் என்று என்னைச் சொல்வது போல் எல்லாம் இல்லை, ஆனால் அந்த வார்த்தைகளும், அவர் செய்த செய்கையும் என்னால் மறக்க முடியவில்லை, நான் மாற தயாராக இருந்தேன். நான் முதலில் எனக்கு நானே சுய கட்டுப்பாடு போட்டேன். ஆபாசப் படங்கள் பார்ப்பதையும், சுய இன்பம் அடைவதையும் கைவிட்டேன். அதன் மூலம் நான் ஒழுக்கத்தை, சுய கட்டுப்பாட்டை, நிலைத்தன்மையையும் கற்றுக்கொண்டேன்.
என் அண்ணனும் உடல் எடை குறைத்து வந்தான், அவன் காலையிலும் மாலையிலும் சாப்பாடு(அரிசி, கோதுமை) எடுத்துக்கொண்டு, மதியம் மட்டும் ஒரு மாதுளை, ஒரு ஆப்பிள் சாப்பிட்டு ஒரு வருடத்தில் 10 கிலோ குறைத்தான். மதியம் உண்பதும் உணவுதான், ஆனால் நாம் அதை உணவாகக் கருதுவதில்லை. நானும் அதே போல் ஒரு இருபது நாள் சாப்பிட்டேன். அப்போது எவ்வளவு எடை குறைந்தது என்று சத்தியமாகத் தெரியவில்லை, ஏனென்றால் நான் எடை இயந்திரத்தில் நின்றால் அது சரியாகக் காட்டாது.
இரண்டு வருடமாக டாக்டர் அரவிந்தராஜை பேஸ்புக்கில் பின்தொடர்ந்து வந்தேன். அவரும் 130 கிலோவிலிருந்து 75 வந்தவர் என்பதால், அவரிடம் கேட்கலாம் என்று முடிவு செய்து அவரிடம் டிசம்பர் ஆறாம் தேதி பேசினேன். அவர் பின்பற்ற சொன்னது இதைதான்.
Paleo diet Morning empty stomach - drink 300ml hot water mixing with 2 teaspoons of virgin coconut oil. Breakfast - 50g - 70g of Ghee roasted Almond+ 200ml butter tea or coffee. ( 30g butter + 200ml Milk) sugar-free cubs is optional. At 11AM - One raw guava or one cucumber At 1PM - 200g vegetable( avoid any form of potatoes) must + 3-5 eggs/ mushroom Manchurian or chukka/ paneer butter fry or Tikka/ cauliflower curd rice or pumpkin curd rice. At 5PM, have Chicken or Mutton bone broth. For dinner eat 200g of chicken/mutton/fish/beef in the mode of gravy, and not deep fry. After eating dinner, have 500ml of lemon juice with adding Himalayan salt. At last before going to sleep walk 30 mins, it can be anytime but preference at before sleep, that can improve quality of the sleep. For cooking you should use only two tablespoon of ghee or butter. Do not use normal oil. I will add supplements for liver functioning.
அவ்வளவுதான், இதையெல்லாம் நீங்க பண்ணா உடம்பு கண்டிப்பா குறையும், ஆனா strict ஆ cheat பண்ணாம பண்ணனும். So don't cheat. நீங்க எதுனாலும் எனக்கு மெஸேஜ் பண்ணுங்க I am there to help you.
அதன் பின் அனைத்தும் என் கையில் தான் இருந்தது. தினமும் கடைக்குச் சென்று பழம், காய்கறிகள் வாங்கி செய்யத் தொடங்கினேன். இதைத் தொடங்கும் முந்தைய நாள் வரை எனக்கு அடுப்பு பற்ற வைக்கத் தெரியாது, சமைக்க வேண்டும் என்பதால் அம்மா, அப்பா கற்றுத் தந்தார்கள். நேரம் காலம் அனைத்தும் எனக்குப் பொருந்திப் போனது. நான் முக்கால்வாசி எடிட்டிங் செய்வதால் வீட்டில்தான் வேலை. அது எனக்கு வசதியாகப் போனது.
ஆனால் டையட் தொடங்கி பத்தாவது நாள் எனக்கு கையில் வேர்க்குரு வரத் தொடங்கின. என் உடல் முழுவதும் அது பரவியது, என்னால் சொரிவதை நிறுத்த முடியாத அளவிற்கு அரிப்பெடுத்தது. அதை Keto rash என்றார்கள் இணையத்தில், டாக்டர் இதற்கும் உணவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றார், நான் தீரத் தேடிப் பார்த்த போது, எனக்கு இதுதான் சரியான விடை என்று தோன்றியது, நீங்கள் வாழ்க்கை முழுக்க ஒரு உணவைச் சாப்பிட்டு வந்தீர்கள் அதை திடீரென மாற்றினால் உங்கள் உடல் அச்சம் கொள்ளும் அல்லவா அந்த அச்சத்தைதான் அது அவ்வாறு வெளிப்படுத்துகிறது. அதையும் கடந்து நான் டையட்டை தொடர்ந்தேன்.
அப்படியே ஆறு மாதமும் சென்றது. நான் காலையில் எழுந்திருப்பேன் Morning pages எழுதுவேன், தேங்காய் எண்ணெய் குடிப்பேன், மற்ற அனைத்தும் செய்வேன். எதையும் மறக்கக் கூடாது என்பதற்காக என்னுடைய மொபைலில் அலாரம் வைத்துக் கொண்டேன். அது ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை அடித்துக்கொண்டே இருக்கும் நானும் செய்துகொண்டே இருப்பேன். என்னைச் சோர்ந்து போகாமல் இருக்க வைத்தது, தினமும் காலையில் எழுந்ததும் எடை பார்ப்பதுதான், ஒரு நாள் குறையும், சில நாட்கள் குறையாது. அப்போதெல்லாம் மனம் தளராமல் இன்றில்லை என்றால் நாளை என்ற புரிதல் எனக்கு ஏற்பட்டது.
நிறையப் பேர் கேட்டார்கள் நான் வொர்க் அவுட் செய்தேனா என்று, ஆம் நான் செய்தது மென்டல் வொர்க் அவுட். நான் இவ்வளவு தான் சாப்பிட வேண்டும் என்று என் மூளையில் வொர்க் அவுட் செய்தேன். ஊரில் பொங்கல் சமயத்தில் வீட்டில் அனைவரும் விட்டு விளாச நானோ அமைதியாக உட்கார்ந்திருந்தேன். வெளியே நண்பர்களோடு சென்றபோது நான் தந்தூரி சிக்கன் மட்டுமே சாப்பிட்டேன், அவர்களோ பொரிச்ச பரோட்டாவை வைத்து ரீல்ஸ் செய்தார்கள். வெளியே சென்றால் தந்தூரி சிக்கன் மட்டுதான் உண்ண வேண்டும். அதுவும் மதியம் இரவுதான். இதனால் நான் வெளியே செல்வதை முக்கால்வாசி தவிர்த்தேன். வெற்றி அடைய வேண்டும் என்றால் வலியை அனுபவிக்க வேண்டும். அந்த வலி நம்மை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் முதிர்ந்தவராக்கும்.
இப்போது ஆடை வாங்கக் கடைக்குச் சென்றால், என்னால் readymade ஆடைகளை அணிந்து பார்க்க முடிகிறது. உடல் எடை குறைப்புக்கு முன்பு நான் XXL அணிந்துகொண்டிருந்தேன், இப்போது L, M அணிகிறேன். இடுப்பு அளவு 44-லிருந்து 36 வந்துவிட்டது.
டையட்டின் ஐந்தாம் மாதத்தில் ஒருமுறை நாங்கள் எப்போதும் பார்க்கும் டாக்டரை பார்க்க நேர்ந்தது, அவர் என்னை அடையாளம் கண்டு வெய்ட் லாஸ் பண்ணீங்களா என்று கேட்டார். அவர்தான் எனக்கு மூன்று வருடம் முன்பு இரத்த அழுத்தத்திற்கு மாத்திரை எழுதித் தந்தவர். ஆறாம் மாதம் வீட்டிற்காக பேக்கரி சென்றபோது, பேக்கரி கடைக்காரர் என்னை அடையாளம் கண்டு உடம்பு குறைச்சீங்களா? என்று கேட்டார். அவர் கடையில் தினமும் மதிய உணவிற்கு கால் கிலோ மிக்சர் வாங்கச் செல்வேன். அவருக்கு அவர் கவலை. ஊரில் மாமா ஒருவர் பார்த்துவிட்டு டேய் மாப்ள என்னால் நம்பவே முடியலடா மாப்ள, உன்னைய அப்டி பாத்து பாத்து இப்படிப் பாக்க என்னவோ போல இருக்கடா என்றார்.
நான் இந்த உருண்டையான பிம்பத்தை உடைக்க பல வருடங்களின் தோல்வி தேவைப்பட்டது. பார்க்கும் அனைவரின் மனதிலும் இருக்கும் எனது பழைய பிம்பம் உடைந்ததே என்று மகிழ்ச்சி கொள்கிறேன். நான் அந்த முன் பின் படத்தை 19.06.2022 அன்று பகிர்ந்தேன். அதே நாள் முந்தைய ஆண்டு நான் எனது நாட்குறிப்பில் ஒன்று எழுதினேன், ஏன் என்னால் எதுவும் பண்ண முடியவில்லை என்று. தற்செயலாக அதே நாளில் அந்த படத்தைப் பகிர்ந்த தினமாக அமைந்தது மகிழ்ச்சி.
நான் மேலே சொன்னதை கண்மூடித்தனமாகச் செய்யலாம் என்று நினைக்காதீர்கள். ஏனென்றால் நம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உடல் அமைப்பை கொண்டவர்களாக இருக்கிறோம். நீங்கள் இதைச் செய்வதாக இருந்தால் ரத்தப் பரிசோதனை செய்துவிட்டு டாக்டரோடு ஆலோசித்து விட்டுச் செய்யுங்கள். நம் உடலுக்கு ஏற்றவாறு அவர் உணவுகளைக் பரிந்துரைப்பார். இதைத் தவறாகச் செய்து பலருக்கு இதனால் இன்னும் எடை கூடித்தான் போயிருக்கிறது. உயிருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் முட்டாள்தனமாகச் செய்யாதீர்கள். டாக்டர் அரவிந்தராஜை தொடர்புக்கொள்ள : +91 91235 64231
சிம்பு நடுவில் தன்னுடைய Transformation வீடியோவில் வெளியிட்டதைப் பார்த்தபோது உண்மையில் அழுகை தான் வந்தது. வெற்றியைப் பார்க்கிறோம், அதற்கு முன் கடந்த வந்ததை நாம் என்றும் பார்ப்பதில்லை. சிம்பு, என்னுடைய பள்ளி நண்பர்கள் ஹரி, தினேஷ், இவர்கள் தான் என்னால் உடல் எடை குறைக்க முடியும் என்று நம்ப வைத்தவர்கள்.
இறுதியாக. எனக்கு இனிமேல்தான் சவாலே இருக்கிறது, இந்த எடையை நான் தக்க வைக்க வேண்டும், அதில்தான் என் வெற்றி அடங்கியுள்ளது. என்னால் முடியும் என்று நம்புகிறேன்.
நெய்யும், வெண்ணெய்யும் சாப்பிட்டால் உடம்பு ஏறுமே? சிக்கன் சாப்பிட்டா உடம்பு குறையுமா? இத சாப்ட்டா போதுமா? என்று சிலருக்கு கேள்விகள் எழலாம், அதைப் பற்றியும் intermittent fasting, quality sleeping என மேலும் பலவற்றைப் பற்றியும் அடுத்த அடுத்த பதிவில் தனித் தனியாக விரிவாக எழுதுகிறேன்.
Comentarios