சில நாட்களுக்கு முன்பு டைடில் பார்க்கில் வேலை செய்யும் என் நண்பன் ஒருவன் அதே டைடில் பார்க்கிலுள்ள வேறொரு நிறுவனத்தில் பணிபுரியும் செய்யும் பெண்ணை சைட் அடிப்பதாகக் கூறினான். உணவு இடைவெளியில் செல்லும்போதெல்லாம் அவளைத் தொடர்ந்து பார்த்து வந்துள்ளான். ஆனால் அந்த பெண்ணின் பெயர் கூட இவனுக்குத் தெரியாது. இவனும் இவனோடு பணிபுரியும் நண்பர்களும் அந்த பெண்ணுக்கு வைத்த பெயர் சமந்தா.
நாளாக நாளாக இது முற்றியது. இதை மிஷன் சமந்தா என்று அழைத்து வந்தான். எனக்கு அவ்வப்போது ஃபோன் செய்து அப்பெண்ணிடம் எப்படியாவது தனியாகச் சந்தித்து, அவளை தனக்குப் பிடித்திருக்கிறது என்று சொல்வதற்கு வழிகேட்டான். நானும் சில வழிகளைச் சொன்னேன்.
அவன் அப்பெண்ணைத் துரத்தி தொல்லை செய்யப் போகிறான் என்றால் அவ்வாறு போகாதே என்று கறாராகக் கூறிவிட்டேன். ஆபிஸில் வைத்தோ, கேன்டீனீல் வைத்தோ அவன் நினைப்பதைச் சொல், அவள் பெயரைக் கூட நீ கேட்க வேண்டாம் என்றேன். ஏனென்றால் வெளியே வைத்து இதைச் செய்தால் நன்றாக இருக்காது என்றேன். தான் அப்பெண்ணின் நண்பர்கள் கூட்டத்தில் பேசுபொருளாகி விடுவோம் என்பதால் அதை மறுத்துவிட்டான்.
ஆனால் திடீரென்று ஒருநாள் மிஷன் அபார்ட்டட் என்று மெஸேஜ் அனுப்பியிருந்தான். பின் ஃபோன் செய்து முழு கூத்தையும் விளக்கினான்.
அந்த பெண்ணின் பெயரையாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்று உடன் வேலை செய்யும் நண்பர்களோடு சேர்ந்து பலநாள் திட்டம் தீட்டி இருக்கிறார்கள். அன்று இவர்களுக்கு என்று வாய்த்தது போல் அன்று அப்பெண் மட்டும் கேன்டீன் தனியாக வந்திருக்கிறாள். இடம் பிடிக்காவா என்று தெரியவில்லை, ஆனால் ஐடிக் கார்டை டேபிலில் வைத்துவிட்டுச் சென்றிருக்கிறாள். இவர்களில் ஒருவர் இதுதான் வாய்ப்பு என்று அவ்வழியே செல்வதுபோல் சென்று ஐடிக் கார்டை எடுத்துப் பார்த்து விட்டு வந்துள்ளார். முதல் முறை சரியாகப் பார்க்காமல் வந்ததால், மீண்டும் ஒருமுறை முயற்சி செய்துள்ளார். நன்றாகப் பார்த்துக்கொண்டிருக்க, அந்த பெண் வருவதுபோல் இருந்ததால், இவர் பதற்றத்தில் அப்பெண்ணின் ஐடி கார்டை அவள் விட்டுச் சென்று நிலையில் வைக்காமல் தவறாக வைத்துவிட்டு ஓடிவிட்டார். அந்த பெண் வந்து கவனித்துவிட்டு குழப்பத்தில் சுற்றி முற்றிப் பார்த்திருக்கிறாள். இவர்கள் கவனிக்காது போல் இருந்துவிட்டனர். பின் அப்பெண்ணின் பெயரைக்கொண்டு லிங்க்டின் ஆப்பில் ரிக்குவஸ்ட் செய்துள்ளனர். ஒரு பையனைத் தவிர மற்ற ரிக்குவஸ்டை அப்பெண் தவிர்த்திருக்கிறாள். அவ்வளவுதான் மிஷனை அபார்ட்டட் என்று நண்பன் முடிவு செய்துவிட்டான்.
இதை என்னிடம் சொன்னபோது நான் அவனிடம் இது தவறு என்றேன். ஏன் இப்படி செய்தீர்கள் என்று கோவம்தான் கொண்டேன். அப்போதுதான் நான் இவ்வாறு செய்த ஒரு சம்பவம் என் நினைவுக்கு வந்தது.
2018-ஆம் ஆண்டில் பேஸ்புக்கில் அறிமுகமாகின நண்பன் ஒருவனை நானும் இன்னொரு நண்பனும் அண்ணா நூலகத்தில் சந்திக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம். நான் அக்காலத்தில் காதலித்த பெண்ணிடம் நான் நாளை நூலகத்தில் வருகிறேன், நாம் சந்திக்கலாம் என்று மெஸேஜ் செய்தேன். நான்தான் காதலித்தேன், அவள் அல்ல. அவளுடைய குரலைக் கூட நான் கேட்டு அப்போது நான்கு வருடமாகி இருந்தது. ஃபோன் செய்து கூட பேசியது இல்லை, ஆனால் மெஸேஜில் நன்றாக பேசி வந்தோம். இப்படிப்பட்டவளிடம் நான் விளையாட்டாக மெஸேஜ் செய்து ‘நான் லைப்ரரி வரேன் நீ வா, நாம மீட் பண்ணுவோம்’ என்று உரிமையாக கேட்டேன். அவளும் அதை சாமர்த்தியமாக தவிர்த்தாள். அவள் வர மாட்டாள் என்று தெரியும், இருந்தாலும் அல்ப்ப புத்தி வருவள் என்று நம்பியது. மறுநாள் வந்தது, பல மணிநேரம் காத்திருந்தும் அவள் வரவில்லை. நான் வந்து இங்கு காத்திருக்கிறேன் என்று மெஸேஜ் எல்லாம் செய்தேன், அவள் வரவில்லை. நான் சந்திப்பெல்லாம் முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிவிட்டேன். அவள் இரவு போல் ஏன் வரவில்லை என்று கேட்டதற்கு தான் தூங்கிவிட்டதாக கூறினாள். நான் அப்படியே விளையாட்டாக விட்டுவிட்டேன்.
ஐந்து வருடம் கழித்து உரைக்கிறது, நான் அவளிடம் விளையாட்டாக எல்லாம் கேட்கவில்லை, எந்த சுய அறிவும் இல்லாமல், பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டேன். திரைப்படங்களில் வரும் ஸ்டாகிங் ஹீரோக்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? எந்த தைரியத்தில் அவ்வாறு நடந்துக்கொண்டேன் என்று எனக்கு தெரியவில்லை. மீண்டும் இது நினைவுக்கு வந்ததும் தாமதிக்காமல், அவளுக்கு மெஸேஜ் செய்து மன்னிப்பு கேட்டு விட்டேன். நினைவு வைத்திருப்பது அதிசியம் தான் என்று பழைய மெஸேஜை மேற்கோள் காட்டி நினைவுபடுத்தினேன். அவளும் பரவாயில்லை இருக்கட்டும் என்றாள். இதுபோல் கேட்பதே பெரிய விஷயம் என்றாள்.
இவ்வாறு மன்னிப்பு கேட்கலாமா, நினைவுபடுத்தலாமா என்று தெரிந்துகொள்ள இன்டர்நெட்டில் பிறர் இதுபோன்று எதிர்க்கொண்ட சூழ்நிலைகள் குறித்து படித்தேன். 'மன்னிக்கிறவன் மனுஷன், மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன்' என்றுதான் அனைத்து அனுபவங்களும் உணர்த்தியது. அதில் 'National Sorry Day' மே 26-ஆம் தேதி என்று தெரிந்துகொண்டேன். ஆஸ்திரேலியாவில் வாழும் காக்கேசியன்ஸ் ஆஸ்திரேலியாவின் பூர்வகுடிகளான அபோரிஜின்ஸ் மக்களிடம் மன்னிப்பு கேட்கும் நாளாக பின்பற்றி வருகின்றனர். நாமும் பின்பற்றினால் என்ன தவறு என்று எனக்கு தோன்றியது.
என் பள்ளி நண்பன் ஒருவனிடமும் நான் தவறாக நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்டேன். ஆறாம் வகுப்பின்போது ஆசிரியரின் ஃபோனை திருடிய பிரச்சினையில் தவறுதலாக நான் மாட்டியதுபோல் இன்னோரு தெலுங்குகார பையனும் மாட்டினான், திருடியவன் ஃபோனை அந்த தெலுங்குகார பையன் பையில் போட்டதை நான் பார்த்துவிட்டேன், பயத்தில் நான் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்துவிட்டேன், இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போக வேண்டும் என்ற மனநிலையிலிருந்தேன். அந்த தெலுங்குகார பையன் தேம்பி தேம்பி அழுதான், நான் மெளனமாக இருந்தது இன்றுவரை என் மனதை வருடிக் கொண்டே இருக்கிறது. அந்த வருடமே அவன் அந்த பள்ளியை விட்டு போய்விட்டான், அவன் பெயரை தெரிந்துக்கொள்ள முயன்றேன், பழைய குரூப் போட்டோவில் தேடியும் பார்த்துவிட்டேன் கிடைக்கவில்லை. அவன் பெயர், ‘கீர்’ என்று தொடங்கும், அவனுக்கு இதன் மூலம் மன்னிப்புக்கேட்டுக் கொள்கிறேன்.
கடைசியாக கூறுவது ஒன்றே ஒன்றுதான், மன்னிப்பு கேட்பதில் குடி மூழ்கி போகாது, உண்மையில் நீங்கள் தவறு செய்திருந்தால் கண்டிப்பாக மன்னிப்பு கேட்கலாம், எதிரில் இருப்பவர் கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள்.
'to err is human, to forgive is divine' - Alexander Pope
Commentaires