To read this in (English)
நான் இதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2021-இல் எழுதினேன், என் மனதிலும் சரி இந்த நாட்டிலும் சரி இன்னும் எதுவும் மாறவில்லை!
நாள்தோறும் காலையில் உதிக்கும் சூரியன்,11:00-1:00 மணி அளவில் தான் அதனுடைய முழு வெப்பத்தை எட்டுகிறது என்று பரவலாக நம்பப்படுகிறது, இந்த நேரத்தில் தான் அனல் மோசமானதாகவும், மக்கள் மயக்கம் போடும் அளவுக்கு அப்போதுதான் சூரியன் தனது கோர முகத்தைக் காட்டுவதாகவும் நம்பப்படுகிறது. ஆனால் சில தரவுகள் வேறு மாதிரியாக இருக்கிறது.
2:00-4:59-க்குள் தான் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று பலதரப்பட்ட தரவுகளும் கூறுகிறது.இதுதான் உண்மை. அந்த நேரத்தில்தான் சூரியன் மறையும், அப்போதுதான் சூரியன் மிகவும் கீழே இருப்பதால் அதிக வெப்பமாக இருக்கும்.
இப்படி வெப்பம் உச்சிக்குச் செல்லும் இந்த நேரத்தில்தான் முக்கால்வாசி பள்ளிகளில் 'Sports Day' அல்லது 'Annual Sports Day Meet' என்று சொல்லப்படுகின்ற 'விளையாட்டு நாள்' அன்று நடத்தப்படப் போகும் பல அணிகள் மோதும் இறுதிப் போட்டிக்காக, ஒரு மாதம் முன்னர் தத்தமது அணிகளில் உள்ள சிறந்த வீரர்களையும், ஆர்வமுள்ள மாணவர்களையும் தேர்வு செய்யும் போட்டிகள் நடைபெறும்(சில போட்டிகள் அப்போதே முடிந்து அதற்கான பரிசுகள் மட்டும் இறுதி நாளன்று தரப்படும். ஓட்டப்பந்தயம் போட்டி மட்டும் இறுதி நாளன்று நடக்கும்). சில பள்ளிகளில் அந்த இறுதிப் போட்டிக்கு வரப்போகும் விருந்தினர்க்காகச் சுட்டெரிக்கும் வெயிலில் ஒட்டிய ஆடையோடு, வேர்த்து விறுவிறுக்க, எரிச்சலைக் கிளப்பும் ‘வண்ணமயமான’ என்று சொல்லப்படுகின்ற 'டீரில்(Drill)'-க்கும் பயிற்சிகள் தரப்படும்.
ஆனால் எல்லா பள்ளிகளிலும் ஒத்துப்போகும்படி நடக்கக்கூடிய இன்னுமொரு டீரில்(Drill) பயிற்சி என்றால் அது 'March past' எனச் சொல்லப்படுகிற 'அணிவகுப்பு' என்ற பயிற்சிதான்.
இறுதி நாளன்று இறுதியாக நடக்கும் இந்த அணிவகுப்பைச் சரியாகச் செய்ய வைக்கக் கிட்டத்தட்ட இரண்டிலிருந்து மூன்று வாரம் தோலை உரித்து விடுவார்கள், ஒழுங்காகச் செய்யாதவர்களைத் தனியாக நிற்க வைத்து அசிங்கப்படுத்தி தன்மானத்தை நோகடிக்கும் வகையில் பயிற்சிகளும் தரப்படும். குறிப்பாக எல்லா அணியிலும் சொல்லப்படுகிற ஊக்கமூட்டும் ஒரு வாக்கியம் 'அந்த டீம விட நாம நல்லா பண்ணணும்' என்பதுதான். மாணவர்களும் உணர்ச்சி பெருக்க, மற்ற அணிகளை விடச் சிறப்பாகச் செயல்பட அல்லது தோற்கடிக்கக் கடுமையாக முயல்வார்கள்.
ஆனால் தனித் தனியாக நடைபெறும் இந்த பயிற்சியானது, இறுதி வாரம் பொழுது எல்லா அணிகளும் விழா நடக்கப்போகும் இடத்தை(மைதானம்) சேர்ந்து சுற்றி வருவதும், அந்த விருந்தினர் நிற்கப் போவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தை கடக்கும் போது, வரிசையில் முன்னால் செல்லும் அந்த குறிப்பிட்ட அணியின் தலைமை மாணவன் தனது அணியை விருந்தினருக்குத் தலைவணங்கக் கட்டளையிட்டுக் கொண்டு, கால்களைத் தரையில் உதைத்து , தலையைத் திருப்பி விருந்தினரைப் பார்த்து தனது கைகளைத் தூக்கி 'தலைவணங்கி (Salute)' செல்ல, அவன் பின்னால் வரும் அந்த அணியின் கொடியைத் தாங்கி வருபவனும் தன் பங்குக்குக் கொடியைச் சாய்த்துத் தலைவணங்குவான், அவன் பின்னால் மூன்று வரிசைகளில் வரும் மாணவர்களும் தங்களது கால்களையும் கைகளையும் அடக்கி, தலையை மட்டும் திருப்பி தலை வணங்குவார்கள், பதிலுக்கு விருந்தினரும் தனது தலையை அசைத்து அவர்களை நோக்கித் தலைவணங்குவார்(Salute).
இந்த குறிப்பிட்ட பயிற்சி மட்டும் மீண்டும் மீண்டும் கடுமையாகத் தரப்படும், சிறு தவறு நேர்ந்தால் கூட விளையாட்டு ஆசிரியர் கழுத்தில் தொங்கும் விசிலால் அடி விழும். ஒரு சில மாணவர்கள் செய்யும் சிறு தவற்றுக்காக மொத்த மாணவர்களும் மீண்டும் முதலிலிருந்து இந்த பயிற்சியைச் செய்யக் கட்டளையிடப் படுவார்கள்.இது அனைத்தும் தலைமை ஆசிரியர் முன்னிலையில், அவர் கண் பார்வையில் நடக்கும்.
ஒரு மாதம் நீடிக்கும் இந்த அக்கப்போரானது ஒரு வழியாக இறுதி நாளன்று முடியும் போது மாணவர்களுக்கு 'போதும்டா சாமி' என்பது போல் இருக்கும், இதை ஆவலுடன் செய்யும் மாணவர்களும் உண்டு. மற்ற சோர்ந்து போன மாணவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் என்றால், இத்தனை கடினமான செய்ததற்கு ஒரு நாள் மாணவர்களுக்கு விடுமுறை என்பதேயாகும்(இந்த முறை அனைத்து பள்ளிகளிலும் நடக்கிறதா என்றால் தெரியாது).
இதைப் பற்றி விரிவாக எழுதுவதற்குக் காரணம், '21ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்' என்ற புத்தகத்தில் 'அர்த்தம்' என்ற தலைப்பின் கீழ் 'ராணுவ அணிவகுப்பைப் பற்றியும், அவர்கள் தங்கள் பூட்ஸ்களை தங்களது உயர் அதிகாரி முன்பு எத்தனை பளபளப்பாக வைத்துக் கொள்ள எவ்வாறு பயிற்றுவிக்கப் படுகிறார்கள், அதனால் அவர்கள் தங்கள் அதிகாரிக்கும், நாட்டுக்கும், அரசுக்கும் எப்படி பற்றோடு இருக்கிறார்கள்' என யுவால் நோவா ஹாராரி எழுதி விவரிக்கிறார்.
எனக்கு இதைப் படித்தவுடன் என்னுடைய பள்ளி அணிவகுப்பு பயிற்சிகள் எல்லாம் நினைவுக்கு வந்தது. உட்கார்ந்து ஆழமாக யோசித்து, இதைப் பற்றி விரிவாக எழுதும் முடிவுக்கு வந்தேன். அதற்கு முன்பு, அணிவகுப்பைப் பற்றி பொதுவாக என்னுடன் படித்த நண்பர்கள், என்னுடைய வட்டாரத்தில் இருப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அறிந்துகொள்ள 'விளையாட்டு நாள் ஏன் நடத்தப்படுகிறது, குறிப்பாக அணிவகுப்பு பயிற்சி ஏன் முக்கியமாகத் தரப்படுகிறது?' என்று என் கேள்வியை முன் வைத்தேன்.
விளையாட்டு நாள் நடத்தப்படுவது 'மாணவர்களுக்குள் இருக்கும் விளையாட்டுத்திறனை வெளி கொண்டுவருவதற்காக' என்றனர். அதுதான் சரியான பதில்.
ஆனால் நான் நினைத்தது போலவே யாருக்கும் 'அணிவகுப்பு பயிற்சி ஏன் தரப்படுகிறது' என்று சரியாக விடை தெரியவில்லை, தாங்கள் ஏன் இதைச் செய்தோம் என்றே அவர்களுக்குத் தெரியவில்லை, கூகுளில் கூட இதற்குச் சரியான பதில் இல்லை. ஒன்று இரண்டு பேர் மட்டுமே விதிவிலக்காக ஒற்றுமைக்காகவும், குழுவாக எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவும், ஒழுங்காக இருக்கவும் பயிற்சி தரப்படுகிறது என்று பதிலளித்தனர். நானோ அவர்கள் பதிலளித்த பின், அது உண்மையில் பள்ளிக்குப் பிறகு மாணவர்களாகிய மக்கள் பின்பற்றுகிறார்களா என்று கேட்டேன். இல்லை என்பதே எல்லாருடைய பதில். சில பேர்தான் அந்த ஒழுங்குமுறையைப் பின்பற்றுகிறார்கள் என்றார்கள், அதுதான் உண்மை. பின் நண்பர்கள் சிலர் மட்டுமே உன்னுடைய புரிதல் என்னவென்று கேட்டார்கள், இதோ என் புரிதல்:
(இந்த புரிதல் மாறுதலுக்கு உட்பட்டது)
இப்போதைக்கு என்னைப் பொருத்தவரை ஒற்றுமைக்காகவும், ஒழுங்குமுறைக்காகவும், குழுவாக எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை மட்டும் உணர்த்தும் ஒரு பயிற்சி அல்ல அது, அதுவொரு சடங்கு. அந்த சடங்கை மீண்டும் மீண்டும் பயிற்சி செய்யும் ஒவ்வொரு மாணவர்களுக்குள்ளும், 'ஒருவன் எப்படி விசுவாசமாக இருக்க வேண்டும்?' என்ற உணர்ச்சியைப் புகுத்தும் செயல்தானே தவிர வேறு எந்த காரணமும் இல்லை(தேசீய கீதம் ஒலிக்கப்படுவதும் அதே ரகம்தான்).
அந்த விசுவாசம் பள்ளியில் தங்கள் அணி என்று ஆரம்பித்து, தன் வீட்டிற்கு, நகருக்கு, மாவட்டத்துக்கு, மாநிலத்துக்கு, நாட்டுக்கு என்று இறுதியில் முடிவடைகிறது.
இது நல்லதொரு வழி, மதங்கள் எவ்வாறு மதம் என்று போர்வையில் மக்களை ஒரு குடைக்குள் கொண்டு வர முயல்கிறார்களோ, அதே ஒழுங்குமுறை முயற்சி தான் இதுவும், இப்படி ஒரு ஒழுங்குமுறைகள் தான் மனிதக் குலத்தை ஒற்றுமையாக்கும். ஆனால் இது சரியான நோக்கத்தில் செல்லவில்லை என்பதே உண்மை.
இது போன்ற பயிற்சிகள் நம்மை இனவாத,தேசியவாதம் போன்ற பெரும் கோட்பாடுகளுக்கு இட்டுச் செல்கிறது. கூர்ந்து யோசித்தால் மதங்கள் எப்படி கற்பனையோ அதேபோல் நாடும் ஒரு கற்பனைதான், சோவியத் ஒன்றியம் மீது அந்த மக்கள் 70 வருடங்கள் நம்பிக்கை வைத்தனர், மக்கள் நம்பிக்கையை இழக்க, சோவியத் ஒன்றியம் கவிழ்ந்தது. அனைத்தும் நாடுகளும் மதங்கள் போல் நமது கற்பனையில் தான் இருக்கின்றன. கற்பனையான ஒன்றின் மீது நாம் விசுவாசம் வைத்து அது எல்லோரையும் நல்ல வழிப்படுத்தினால் மகிழ்ச்சி, ஆனால் அது அவ்வாறு செய்வது அல்ல. பற்று என்ற போர்வையில் நம்மைத் தீய வழியிலே செல்ல ஊக்குவிக்கிறது. தேசியவாதமும் இனவாதமும் தோன்றி போர்களையும் வன்முறைகளையும் இதுவரை மட்டுமே உண்டாக்கியதே தவிர, நமக்கு எந்தவிதமான நன்மையும் பயக்க வில்லை. பள்ளிகளும் இதை எதற்காக நாம் செய்கிறோம் என்று சொல்லித் தருவதே கிடையாது, அதைக் கேள்வி கேட்க மாணவர்கள் முயல்வதும் இல்லை. ராணுவத்தில் செய்து வரும் ஒரு சடங்கை இன்றும் பள்ளிகளில் எதற்காக என்று ஒழுங்காக கற்று தராமல் மாணவர்களை முட்டாள்தனமாக ஆக்குவது, தப்பான எண்ணங்களை விதைப்பது, பயிற்சி என்ற பெயரில் வெயிலில் வாட்டி சாகடிப்பதைத்தான் செய்கிறார்கள்.
ஒன்று இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் இல்லையெனில் ஒழுங்காக விளக்கி பயிற்சி தர வேண்டும், பள்ளிக்குப் பின்னும் நாம் அதை கடைப்பிடிக்க வேண்டும் என்று போதிக்கவும் வேண்டும். அதுவும் இல்லை என்றால் இந்த சடங்கு வேண்டாம், எப்போதும் கணிதம், அறிவியல் ஆசிரியர்களால் பறிக்கப்படும் 'Moral science' வகுப்புகளைச் சரியாக நடத்த வேண்டும்.
நான் எனது பள்ளி நாட்களில் இதைக் கேட்கவில்லை, எனக்கு அப்போது போதிய விழிப்புணர்வு இல்லை,மேலும் கேள்வி கேட்டால் பதில் சொல்ல ஆசிரியர்கள் எங்கே தயாராக இருக்கிறார்கள், கேள்வி கேட்காமல் விடாமல் வாந்தி எடுக்க வை என்பதுதான் அவர்களுக்கும் பயிற்சி தரப்பட்டு இருக்கிறது. அதனால் இப்போது இந்த புத்தகம் மூலமாகத் தோன்றியதைக் கேட்கிறேன்,
"எப்போது அந்த சடங்கைக் கைவிடுவீர்கள்?
コメント