top of page
Writer's picturePari

World Book Day


2018-ஆம் ஆண்டு, கல்லுரியின் இறுதியாண்டில், Visual communication படிக்கும் மாணவர்களான எங்களுக்கு 'Novel Adaptation' என்ற ப்ராஜெக்ட் தந்தார்கள். அதாவது ஒரு நாவலையோ அல்லது சிறுகதையோ தழுவி ஒரு குறும்படம் இயக்க எங்களிடம் கூறினார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு குறும்படம் எடுக்க வேண்டும்.


நான் சிறுவயது முதல் செய்தித்தாள்கள் மட்டுமே படிக்கும் பழக்கமுடையவன். சிறுவயது என்றால் 2008-2009 வாக்கில் பதினோரு வயதில். வீட்டில் தந்தி செய்தித்தாள் தான் வாங்கிகொண்டு இருந்தார்கள். நான் அதில் அதிமுக்கியமாக வாசிப்பது விளையாட்டு செய்திகள் மட்டும்தான்.


செய்தித்தாள் வந்ததும் அதை விரித்து வைத்து கடைசி பக்கத்திலிருந்து தொடங்குவேன். பின்தான் அடுத்த பக்கங்களுக்கு செல்வேன். முந்தினம் இரவு நடந்த கிரிக்கெட் போட்டியை பார்த்திருப்பேன் ஆனால் மீண்டும் ஏதோ நேற்று நான் அந்த போட்டியை காணதவன் அதைப்பற்றி தெரிந்து கொள்பவன் போல் வாசிப்பேன். வரி வரியாக விளையாட்டு செய்திகள் பக்கத்தை கரைத்து முடித்துவிட்டு தான் வேறு பக்கங்கள் நோக்கி செல்வேன். அப்படியே குடும்ப மலர், குழந்தைகள் மலர் என்று ஞாயிறும், வெள்ளியும் இணைப்பாக வருவதையும் வாசிப்பேன். 


சென்னைக்கு வந்தபின் வார இதழான விகடன் வாசிக்க தொடங்கினேன். இன்டர்நெட் வசதி கிடைத்ததும் நான் கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்கும் பழக்கம் விட்டு போனது.


நானும் நேர்மையாக ப்ராஜெட்டை முடிக்க வேண்டும் என்று சிறுகதைகள் இன்டர்நெட்டில் தேடி வாசிக்க முயன்றேன். அது என்னை ஓ. ஹென்றியிடம் அழைத்து சென்றது, அவர் சிறுகதையான 'Unfinished story' சிறுகதையை தழுவி குறும்படத்தை எடுத்து முடித்தேன்.


அந்நாட்களில் நண்பன் பாலு, தஸ்தவெஸ்கியின் 'வெண்ணிற இரவுகள்' குறுநாவல் படித்து முடித்திருந்தான். அவனிடம் வாங்கி ஒவ்வொரு நண்பர்களாக வாசிக்கத் தொடங்கினார்கள். நாமும் வாசிப்போம் என்று என் சுற்று வந்ததும் வாங்கி வாசித்தேன்‌. இரவில் மாத்திரம் வாசிக்கச் சொல்லி அறிவுறுத்தினார்கள். நானும் அவ்வாறே ஓரே இரவில் வாசித்தேன். 


நான் அப்போதும் காதல் மோகத்திலிருந்தேன். அதனால் வெண்ணிற இரவுகள் நன்றாக தொடர்புப்படுத்திக்கொள்ள முடிந்தது. பின்னாளில் நான் தஸ்தவெஸ்கியின் ரசிகனாவேன் என்று எனக்கு அன்று தெரியாது. வெண்ணிற இரவுகள் சீசன் போய் 'பால் அரசியல்', 'ஜிப்ஸி', 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' சீசன் என்று பல சீசன்கள் வந்தது. வாசிப்பு பழக்கம் வரத் தொடங்கியது. பின் அவ்வளவு தான் என்னால் என்னைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை, புத்தகங்களை வாங்கி வாசித்துக் குவிக்கத் தொடங்கினேன். 


நாளொன்றுக்கு மூன்று படங்கள் பார்த்து அலுத்துப் போன எனக்கு, புத்தகங்கள் புது டோப்போமைனை தந்தது. ஒவ்வொரு புத்தகமும் என்னை புது உலகத்தை உருவாக்க வைத்து, கற்பனை வளத்தை வளர்த்தது.


2020-ஆம் ஆண்டில் கொரோனா ஊரடங்கு நாட்களில் இரண்டாயிரம் பக்கங்கள் கொண்ட 'பொன்னியின் செல்வன்' நாவலை பத்து நாளில் வாசித்து முடித்தேன். ஒவ்வொரு புத்தகத்தையும் ரசித்து வாசித்தேன், கடமைக்கு என்று வாசித்தது அல்ல.


நான் படங்களுக்கென்று சிந்திக்கும் கதைகள் உருமாறத் தொடங்கின. புத்தக வாசிப்பு என்னை மெருகேற்றியது. நுணுக்கமான, மெலிதான கதைக் களங்களைக் கையாள பழக்கத்தை உண்டாகியது.


தத்துவார்த்த ரீதியாகப் பல விடயங்களை எனக்கு கற்றுத் தந்தது. தேவையற்ற பல விடயங்களை விவாதிக்கும் பழக்கத்தை விட்டேன். நமது கைகளில் இருக்கும் விரல்கள் ஒவ்வொன்றும் ஒரே அமைப்பில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்று எனக்கு புத்தகங்கள் உணர்த்தியது. இதனால் சக மனிதர்களைப் புரிந்து கொள்ள முடிந்தது.


நான் பங்குச்சந்தை குறித்த புத்தகங்களை, கடல்சார் வேலைகள் குறித்த புத்தகங்களை வாசிப்பேன் என்று நினைத்துக்கூடப் பார்த்ததேயில்லை, ஆனால் அவற்றையும் வாசித்தேன்.


நான் புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்து ஐந்து வருடம் ஆகிறது. இன்று வரை 29,850 பக்கங்கள் வாசித்துள்ளேன். அதாவது 140 புத்தகங்கள். என்னை வாழ வைப்பது அதுதான், என்னைச் சாகடிப்பதும் அதுதான்.


பல பல புத்தகங்கள் வாசித்து, எனக்கென்று இருந்த தத்துவங்களை அது உதறித் தள்ள வைத்தது. மனிதன், வாழ்க்கையில் கண்டிப்பாக ஒரு தத்துவத்தை நம்ப வேண்டும், அது முட்டாள்தனமாக இருந்தாலும். இதையும் புத்தகங்கள் தான் புரிய வைத்தது.


கடந்த ஆறு மாதங்களாக, புத்தகங்கள் தரும் டோப்போமைன் குறைந்துவிட்டது, அதை மீண்டும் மீட்டெடுக்க முயன்று வருகிறேன். நிச்சியம் அதில் வெற்றி பெறுவேன்.


நான் புத்தகம் வாசிக்கத் தொடங்கும் முன்பு நமக்கு எல்லாம் தெரியும் என்ற அகம்பாவம் இருந்தது. நான்தான் சரியானவன் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு உழன்று வந்தேன். ஆனால் புத்தகங்கள் நீ அவ்வாறெல்லாம் இல்லை, நீ ஒரு சிறு துகள் மட்டுமே என்று எனக்கு நன்றாக உரைக்கும் வகையில் உணர்த்தியது.


So, I am forever grateful to books.

Happy World Book Day.

36 views0 comments

Recent Posts

See All

Comments


This image has three writers Camus, Dostoevsky & Kafka with a quote
bottom of page